

ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அணி வீராங்கனை அமன்ஜோத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்தன. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
நேற்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27.2 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. இதனால், பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலிய அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அணியின் அமன்ஜோத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிப்பதைத் தடுக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். ஃபோப் லிட்ச்ஃபீல்டு மிகவும் ஆக்ரோஷமான பேட்டர். அவருக்கு சில டாட் பந்துகளை வீசினால், வேறு ஏதேனும் வித்தியாசமான ஷாட் விளையாட முயற்சி செய்வார் எனத் தெரியும். அதன் காரணமாகவே நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீச முயற்சி செய்தேன்.
ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் நன்றாக இருந்ததால், ஆஸ்திரேலிய அணி 380 ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், லிட்ச்ஃபீல்டு விக்கெட்டினை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்த உதவியது. ஸ்ரீ சரணி மிகவும் நன்றாக பந்து வீசினார் என்றார்.
அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 2) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.