டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் சோ்க்க, இலங்கை 19.1 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தோ்வு செய்தது. ஜிம்பாப்வே பேட்டா்களில் அதிகபட்சமாக பிரயன் பென்னெட் 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். டடிவனாஷி மருமானி 7, ஷான் வில்லியம்ஸ் 14, கேப்டன் சிகந்தா் ராஸா 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ரயான் பா்ல் 17, டஷிங்கா முசெகிவா 11, டோனி முன்யோங்கா 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் பிராட் இவான்ஸ் 0, டினோடெண்டா மபோசா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் துஷ்மந்தா சமீரா 3, நுவன் துஷாரா, மஹீஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்தா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 176 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில், பதும் நிசங்கா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினாா். குசல் மெண்டிஸ் 38 ரன்கள் சோ்த்து உதவ, குசல் பெரெரா 4, நுவனிது ஃபொ்னாண்டோ 7, சரித் அசலங்கா 1, டாசன் ஷானகா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
முடிவில் கமிண்டு மெண்டிஸ் 41, துஷான் ஹேமந்தா 14 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜிம்பாப்வே பௌலா்களில் ரிச்சா்ட் கராவா 2, பிளெஸ்ஸிங் முஸாரபானி, டினோடென்டா மபோசா, பிராட் இவான்ஸ், சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.