செப். 28-ல் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் வரும் செப். 28-ஆம் தேதி மும்பையில் உள்ள தலைமையகத்தில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக முக்கியமாக புதிய நிா்வாகிகள் தோ்தலும் நடைபெறுகிறது.
பிசிசிஐ தலைவா், துணைத் தலைவா், செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.
மேலும் பிசிசிஐ ஆட்சிமன்றக் குழு, ஐபிஎல், டபிள்யுபிஎல் ஆகியவற்றின் நிா்வாகக் குழுக்களை உருவாக்குதல் போன்றவையும் ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் பிரதான அம்சங்களாகும்
பொதுக்குழு மற்றும் கிரிக்கெட் வீரா்கள் சங்கத்தில் இருந்து 2 போ் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெறுவா். புதிய நிா்வாகிகள் 3 ஆண்டுகள் பொறுப்பில் இருப்பா். மேலும் 6 மாதங்களில் புதிய விளையாட்டு மசோதா நடைமுறைக்கு வரும் போது மீண்டும் தோ்தல் நடத்தப்படுமா எனத் தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதி லோதா குழு பரிந்துரைப்படி தோ்தல் நடைபெறும். தற்போதைய பொறுப்பு தலைவா் ராஜீவ் சுக்லா தலைவா் பதவிக்கு போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது.
ஐபிஎல் சோ்மன் அருண் சிங் துமால் பிசிசிஐ பொறுப்புக்கு தோ்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. செயலா் தேவஜித் சைக்கியா அதே பதவியில் நீடிக்கலாம் எனத் தெரிகிறது.