
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார் அண்மையில் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச டி20 போட்டிகளுக்கு விடைகொடுத்த அவர், ஆஷஸ் தொடர், ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சரியாக கூறவேண்டுமென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதனைகள் படைப்பதற்காக என்னுடைய உடலை எந்த அளவுக்கு வருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைக்கிறேன். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்து அதற்கு தயாராகி வருகிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலும் சிறப்பாக செயல்படுவதற்கான அருமையான வாய்ப்பு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பதற்கு இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். எனக்கு 35 வயதாகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறேன். டெஸ்ட் போட்டிகள் எப்போதும் என்னுடைய முதல் தெரிவாக இருக்கும் என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 வடிவிலான உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல மிட்செல் ஸ்டார்க் முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.