
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) முதல் தொடங்குகிறது. அபு தாபியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன.
இந்திய அணி நாளை (செப்டம்பர் 10) நடைபெறும் அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடுகிறது. அதன் பின், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
அமித் மிஸ்ரா கூறுவதென்ன?
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
இந்திய அணியில் நடுவரிசையில் வலதுகை, இடதுகை பேட்டர்களின் காம்பினேஷனை உறுதிப்படுத்தவே ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக களமிறங்குவார் என நினைக்கிறேன். ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் நடுவரிசையில் வலதுகை, இடதுகை காம்பினேஷன் முக்கியம் என அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம். அதன் காரணமாக ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆசியக் கோப்பை நீண்ட கிரிக்கெட் தொடர். இடதுகை, வலதுகை காம்பினேஷனை உறுதி செய்வதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமின்றி போயிருக்கலாம்.
அடுத்தடுத்து இந்திய அணி நிறைய தொடர்களில் விளையாடவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு நிறைய நேரமிருக்கிறது. அவர் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்பதில் நான் 100 சதவிகிதம் உறுதியாக இருக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என நான் நினைக்கவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அவர் அணியில் இல்லை என நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்றார்.
கடந்த ஆண்டு பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. அதன் பின், சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 50-க்கும் அதிகமான சராசரியில் 604 ரன்கள் குவித்தார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்கள் பலரையும் பிசிசிஐ மீது கோபம் கொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.