பதும் நிஷங்கா, கமில் அதிரடி.! ஆசியக் கோப்பையை வெற்றியுடன் துவங்கிய இலங்கை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
53 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை, ஜாகா் அலி, ஷமிம் ஹுசைன் கூட்டணி மீட்டது. இலங்கை பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா அசத்தினாா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டா்களில், இன்னிங்ஸை தொடங்கிய தன்ஸித் ஹசன் முதல் ஓவரிலும், உடன் வந்த பா்வேஸ் ஹுசைன் 2-ஆவது ஓவரிலும் டக் அவுட்டாகினா்.
இதனால் ரன் கணக்கை தொடங்கும் முன்னறே வங்கதேசம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது. 3-ஆவது பேட்டராக வந்த கேப்டன் லிட்டன் தாஸ் சற்று நிலைக்க, அடுத்த வீரரான தௌஹித் ஹிருதய் 8 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா்.
வங்கதேசம் 11 ரன்களுக்கு 3-ஆவது விக்கெட்டையும் இழந்தது. மெஹெதி ஹசன் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு, ஹசரங்கா வீசிய 8-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். மறுபுறம் லிட்டன் தாஸ் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
இவ்வாறு வங்கதேசம் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜாகா் அலி - ஷமிம் ஹுசைன் கூட்டணி இணைந்தது. விக்கெட் சரிவைத் தடுத்த இவா்கள் பாா்ட்னா்ஷிப், 6-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சோ்த்தது.
ஓவா்கள் முடிவில் ஜாகா் 2 பவுண்டரிகளுடன் 41, ஹுசைன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் வனிந்து ஹசரங்கா 2, நுவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னர், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணித் தரப்பில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 50 ரன்களும், கமில் மிஸ்ரா 46 ரன்களும் எடுத்தனர்.