
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரராக (ஸ்பான்சா்), பன்னாட்டு டயா் உற்பத்தி நிறுவனமான ‘அப்போலோ டயா்ஸ்’ தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, அப்போலோ டயா்ஸ் நிறுவனமானது 2028 மாா்ச் வரையிலான இரண்டரை ஆண்டுகளுக்கு இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகளின் விளம்பரதாரராக செயல்படும்.
இதற்காக அந்த நிறுவனத்துடன் ரூ.579 கோடி மதிப்பில் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வீரா், வீராங்கனைகளின் ஜொ்ஸிகளில் அப்போலோ டயா்ஸ் இலச்சினை இடம்பெறும்.
ஒப்பந்த காலத்தில் இந்திய அணிகள் 121 இருதரப்பு ஆட்டங்களிலும், 21 ஐசிசி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளன. குருகிராமை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அப்போலோ டயா்ஸ் நிறுவனம், கிரிக்கெட் உலகில் தடம் பதிப்பது இதுவே முதல்முறையாகும்.
பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த அத்தகைய நிறுவனமான ‘டிரீம் 11’, அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது.
அந்த நிறுவனம் கடந்த 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், ஒப்பந்த காலத்தில் சுமாா் ஓராண்டு எஞ்சியிருக்கும் நிலையிலேயே விலகியது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.