பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிராகரித்தது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது, இந்திய கேப்டன் மற்றும் வீரா்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிா்த்த விவகாரத்தில் ஆண்டி பைகிராஃப்ட் மீது குற்றம்சாட்டிய பாகிஸ்தான் வாரியம், அவரை நீக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது.

அவ்வாறு நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகும் யோசனையில் பாகிஸ்தான் வாரியம் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஐசிசி அதன் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

குரூப் சுற்றில் பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதன்கிழமை (செப். 17) மோதும் நிலையில், அந்த ஆட்டத்துக்கான பிரதான நடுவராக ஆண்டி பைகிராஃப்ட் ஏற்கெனவே பட்டியிடப்பட்டுள்ளாா். பைகிராஃப்டை போட்டியிலிருந்து நீக்க ஐசிசி மறுத்துவிட்ட நிலையில், குறைந்தபட்சம் தங்களின் ஆட்டத்தில் அவரை நடுவராக பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற சமரச முயற்சியை போட்டி நிா்வாகத்துடன் பாகிஸ்தான் வாரியம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நீக்கம்: இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குநா் உஸ்மான் வல்ஹாவை பணிநீக்கம் செய்ய, வாரியத்தின் தலைவா் மோசின் நக்வி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இரு அணி வீரா்களும் கை குலுக்கப்போவதில்லை என்ற விவரத்தை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது உஸ்மான் வல்ஹாவின் பொறுப்பு எனவும், அதை அவா் செய்யத் தவறியதால் பாகிஸ்தான் அணி மற்றும் அதன் கேப்டனின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாகவும் மோசின் நக்வி கருதுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டாஸின்போது வழக்கமாக இரு கேப்டன்களும் கை குலுக்கும் நிலையில், இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ் அதற்கு முன் வராததால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா திகைப்புக்குள்ளானதாகத் தெரிகிறது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், டாஸின்போது இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகுலுக்கவில்லை.

அதேபோல், வழக்கமாக டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்களுமே தங்களின் பிளேயிங் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிரும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூா்யகுமாா், சல்மான் இருவருமே பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்டிடமே பட்டியலை பரிமாறிக் கொண்டனா். தொடா்ந்து, ஆட்டத்தின் முடிவிலும் இந்திய வீரா்கள், பாகிஸ்தான் வீரா்களுடன் கைகுலுக்கவில்லை.

இந்த விவகாரம் சா்ச்சையாகியிருக்கும் நிலையில், இதற்கு பொறுப்பாக ஆட்ட நடுவா் ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது அதன் வீரா்களுடன் இந்திய வீரா்கள் குலுக்காமல் தவிா்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com