
இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் 3 அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (செப்டம்பர் 16) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா ஏ தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கேம்ப்பெல் கெல்லாவே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேம்ப்பெல் கெல்லாவே 97 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி ஒரு ரன்னிலும், ஆலிவர் பீக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கூப்பர் கன்னோலி மற்றும் லியம் ஸ்காட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. கூப்பர் கன்னோலி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 84 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஏ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஏ தரப்பில் ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் குர்னூர் பிரார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
லியம் ஸ்காட் 47 ரன்களுடனும், ஜோஷ் பிலிப் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.