
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்தார். வழக்கமாக முன்வரிசையில் களமிறங்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 விக்கெட்டுகள் ஆகியும் நேற்றையப் போட்டியில் பேட்டிங் செய்ய வராதது அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
முன்னாள் கேப்டன் ஆதரவு
ஓமனுக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரில் களமிறங்காமல் பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு விளையாட வாய்ப்பளித்த கேப்டன் சூர்யகுமார் யாதவின் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யகுமார் யாதவ் ஒரு ஓவர் பேட்டிங் செய்திருந்தாலும், அவர் சில ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள் அடித்திருப்பார். ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்த விதத்திலிருந்து அவருக்கு ஓமனுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் பயிற்சி தேவையில்லை என்பது தெரிந்திருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால், குல்தீப் யாதவின் பேட்டிங் அணிக்கு உதவியாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அவரை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம்.
சூர்யகுமார் யாதவ் வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவரே பந்துவீச்சில் ஈடுபட்டார். ரிங்கு சிங்குக்கும் பந்துவீச வாய்ப்பளித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அவர் மிகவும் புதுமையாக யோசிக்கக் கூடியவர். அதன் காரணமாகவே, அவர் பேட்டிங்குக்கு வரமால் குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீங் சிங்கை முன்கூட்டியே களமிறக்கியிருக்கிறார் என்றார்.
துபையில் நாளை (செப்டம்பர் 21) நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.