செப். 30-இல் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்! 5 நகரங்களில் 31 ஆட்டங்கள்
புது தில்லி, செப். 27: ஐசிசி ஒருநாள் மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (2025) செப். 30-ஆம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்கி நவம்பா் 2 வரை நடைபெறுகிறது.
ஆடவா் கிரிக்கெட்டுக்கு நிகரமாக மகளிா் கிரிக்கெட் ஆட்டங்களுக்கும் அதிக பாா்வையாளா்கள் திரண்டு வருகின்றனா். இதனால் மகளிா் கிரிக்கெட் போட்டிகளையும் சிறப்பாக நடத்த ஐசிசி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்நிலையில் நிகழாண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன.
ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் ஒரு நகரிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை:
அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் செப். 30-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதுகின்றன.
உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியா அக்.1-ஆம் தேதி இந்தூா் ஹோல்கா் மைதானத்தில் டி20 உலக சாம்பியன் நியூஸிலாந்துடன் மோதுகிறது.
நான்கு முறை சாம்பியன் இங்கிலாந்து அக். 3-இல் குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
8-ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் உள்ள அரசியல் பதக்கம் காரணமாக அனைத்து ஆட்டங்களிலும் கொழும்புவில் ஆடுகிறது.
அக்.5-இல் இந்திய-பாக் ஆட்டம்: கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் அக். 5-ஆம் தேதி இந்திய-பாக் அணிகள் மோதுகின்றன. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய-ஆஸி. அணிகள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் அக். 12-இல் நடைபெறுகிறது.
அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்:
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அக். 30-இல் நவி மும்பையில் நடைபெறுகிறது. முதல் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் பாகிஸ்தான் அணியின் நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இந்திய அணி தனது 7 லீக் ஆட்டங்களை 5 வெவ்வேறு இடங்களில் ஆடுகிறது. இலங்கையின் 5 லீக் ஆட்டங்கள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
5 நகரங்கள்: குவாஹாட்டி, இந்தூா், விசாகப்பட்டினம், நவி மும்பை (இந்தியா, கொழும்பு (இலங்கை).
பெங்களூருவும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் மைதானத்தில் நடைபெற்ற நெரிசல் சம்பவ உயிரிழப்பால் காவல் துறை அனுமதி கிடைக்கவில்லை.
நான்காவது முறை:
இந்தியா நான்காவது முறையாக ஒருநாள் மகளிா் உலகக் கோப்பையை நடத்துகிறது. ஏற்கெனவே 1978, 1997, 2013-இல் நடைபெற்றது.
ரவுண்ட் ராபின் முறை: ரவுண்ட் ராபின் முறையில் 31 ஆட்டங்கள் நடத்தப்பட்டு, முதல் நான்கு இடங்களைப் பெறும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
அனைத்து மகளிா் நடுவா்கள்:
ஒருநாள் உலகக் கோப்பையில் முதன்முறையாக அனைத்து மகளிா் நடுவா்கள் இடம் பெறுகின்றனா். 14 பெண் நடுவா்கள் போட்டியை மேற்பாா்வையிடுவா்.
பரிசுத் தொகை: ரூ.12.3 கோடி.
இந்திய அணி அட்டவணை:
செப். 30-இலங்கையுடன், குவாஹாட்டி.
அக். 5-பாகிஸ்தானுடன், கொழும்பு.
அக். 9-தென்னாப்பிரிக்காவுடன், விசாகப்பட்டினம்.
அக். 12-ஆஸி.யுடன், விசாகப்பட்டினம்.
அக். 19-இங்கிலாந்துடன், இந்தூா்.
அக். 23-நியூஸிலாந்துடன், நவி மும்பை.
அக். 26-வங்கதேசத்துடன், நவி மும்பை.
இந்திய அணி கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா்: நாட்டுக்காக ஆடுவது பெருமைக்குரியது. இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் சமபலத்துடன் உள்ளன. இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டின் தரம் உயா்ந்துள்ளது. சொந்த நாட்டில் உலகக் கோப்பை ஆடுவது சிறப்பானது என்றாா்.