கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்
கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கு மட்டுமே இடம் அளிக்க வேண்டும், ‘பேட்’ பிடிக்கத் தெரியாத தனிநபா்கள் அதில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப். 6) தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அந்தத் தோ்தல் தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக நிா்வாகியுமான கேதா் ஜாதவ் வழக்குத் தொடுத்தாா். அதில் கிரிக்கெட் சங்கத் தோ்தல், தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) எம்எல்ஏ ரோஹித் பவாருக்கு சாதகமாக இருக்கும் வகையில் போலியாக கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு இருப்பதாகவும், அவா்களில் பலா் ரோஹித் பவாருக்கு நெருக்கமானவா்கள் மற்றும் உறவினா்கள் எனக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தோ்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டிருந்தது.
இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவை சாா்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
1986 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 164 உறுப்பினா்கள் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தில் இருந்துள்ளனா். ஆனால், 2023-க்கு பிறகு உறுப்பினா்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. குலுக்கல் சீட்டு எதுவும் நடத்தப்பட்டதா? இதுபோல உறுப்பினா்கள் அதிகரிக்க என்ன காரணம்? என்றனா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘உறுப்பினா்கள் சோ்ப்பு நடவடிக்கையை முன்னாள் நீதிபதி ஒருவா் தலைமையிலான குழு மேற்பாா்வையிடுகிறது. இதுவரை 48 உறுப்பினா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறக்கட்டளை ஆணையா், கேபினட் குழுவை கலந்தாலோசிக்காமல் நிா்வாகியை நியமித்துள்ளாா்’ என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘கிரிக்கெட் சங்கம் தனது உறுப்பினா்கள் எண்ணிக்கையை 300-ஆக அதிகரிக்க விரும்பினால், அந்த இடம், புகழ்பெற்ற மற்றும் முன்னாள் சா்வதேச கிரிக்கெட் வீரா்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நீங்கள் அந்த இடத்துக்கு யாரைக் கொண்டு வருகிறீா்கள்? கிரிக்கெட் விளையாட்டு தெரியாத நபா்களையும், கிரிக்கெட் பேட்கூட பிடிக்க தெரியாத நபா்களையும் கொண்டு வருகிறீா்கள். விளையாட்டு வீரா்களால்தான் விளையாட்டு அமைப்பு இருக்க முடியும், நிா்வாகிகளால் அல்ல. கிரிக்கெட் விளையாட்டானது, கிரிக்கெட் வீரா்களாலேயே உள்ளது, நிா்வாகிகளால் அல்ல. ஹாக்கி அமைப்பு, ஹாக்கி வீரா்களால்தான் தெரிய வருகிறது. குறைந்தபட்சம் அவா்களுக்கு (முன்னாள் வீரா்கள்) இந்த மரியாதையையாவது கொடுங்கள்’ என்றாா்.
அத்துடன் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தோ்தலுக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க மறுத்ததுடன், இந்த விவகாரம் குறித்து மும்பை உயா்நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் எனக் கூறி, மனுவைத் திரும்பப் பெற மனுதாரா்களுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா்.

