ஆப்கன் vs புரோட்டீஸ்! டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தலைசிறந்த ஆட்டம்!!
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி அனைவரின் இதயத்துடிப்பையும் எகிறவைத்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்தப் போட்டியாக பதிவாகியிருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போட, டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் சனிக்கிழமை (பிப். 7) கோலாகலமாகத் தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.
சிம்ம சொப்பனமான சிறிய அணிகள்
இந்தத் தொடரில் சிறிய அணிகள் பிரதான அணிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு திடீர் திருப்பமாக, பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து, இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்துக்கு நேபாளம் என சிறிய கற்றுக்குட்டி அணிகள், பெரிய அணிகளுக்கு சிம்ம சொப்பனாமாகத் திகழ்ந்திருக்கின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிர்ச்சித் தோல்விகள் இல்லாவிட்டாலும், த்ரில் வெற்றிகளுக்குப் பஞ்சமில்லாமல் டி20 உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆப்கன் vs புரோட்டீஸ்
இந்தத் தொடரில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் சுற்றின் 13-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான், தென்னாப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டான் 61 ரன்களும், விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் 59 ரன்களும், பிரேவிஸ் 23, டேவிட் மில்லர் 20 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 7 பந்துகளில் 2 பௌண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்ட மார்கோ யான்சென் 16 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியை 180 ரன்களைக் கடக்க உதவினார். ஆப்கானிஸ்தான் அணித் தரப்பில், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதைத்தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நல்ல தொடக்கம் அமைத்தது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராஹிம் ஜத்ரன் 12 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுக்க, அடுத்து வந்த குல்பதீன் நைப், செதிகுல்லா அடல் இருவரும் ரன்கள் ஏதுமின்றி வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடி
52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் தவிப்புக்குள்ளானது. ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மற்றொரு முனையில் அதிரடி காட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்து அசத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 42 பந்துகளில் 4 பௌண்டரிகள், 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 84 ரன்கள் குவித்து கேசவ் மஹாராஜிடம் வீழ்ந்தார்.
கடைசி ஓவரை ககிசோ ரபாடா வீசினார். கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் தேர்வையாக இருந்தது. முதல் பந்தைத் தூக்கி அடித்த நூர் அகமது கேட்ச் ஆனார். ஆட்டம் முடிந்துவிட்டது என நினைத்த நிலையில், அந்த பந்து நோ பால் ஆனது. அடுத்த பந்து வைட்.
6 பந்துகளில் 11 ரன்கள் தேவையாக இருந்தது. நூர் அகமது முதல் பந்து ஃப்ரீ-ஹிட்டில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு மேலும் பதற்றத்தை உருவாக்கினார்.
இதனால், 4 பந்துகளில் 5 ரன்கள் தேவையாக இருந்தது. மூன்றாவது பந்திலும் நூர் அகமதால் தூக்கி அடிக்க முடியவில்லை. மீண்டும் நான்காவது பந்தில் நோ பாலாக போட அதில் 2 ரன்களை எடுத்தார் நூர் அகமது.
அதைத் தொடர்ந்து கடைசி மூன்று பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நூர் அகமது - ஃபைசல் பரூக்கி இருவரும் இரண்டு ரன்கள் ஓடினர். இதில், இரண்டாவது ரன் ஓடியபோது பரூக்கி ரன் - அவுட்டானார். 19.4 ஓவர்களில் 187 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட்டாக போட்டி சமனில் முடிந்தது.
டி20 போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங் செய்ய குர்பாஸ் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் இருவரும் களமிறங்கினர். சூப்பர் ஓவரை இங்கிடி வீசினார்.
முதல் பந்தில் பௌண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும் விளாசிய ஓமர்ஸாய், மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். குர்பாஸ் ஒரு ரன் எடுத்த நிலையில், 5 வது பந்தில் பௌண்டரியும், கடைசிப் பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார் ஓமர்ஸாய். சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் மில்லர் - பிரேவிஸ் இருவரும் களம்புகுந்தனர். இந்த முறை பரூக்கி வீசினார். முதல் பந்தில் மில்லர் ஒரு ரன் எடுக்க, பிரேவிஸ் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் பிரேவிஸ் விக்கெட்டைப் பறிகொடுக்க, அடுத்து வந்த ஸ்டப்ஸ் பௌண்டரி விளாசினார். 5 பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கடைசிப் பந்தில் 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், சிக்ஸர் விளாசி மீண்டும் ஸ்கோரை சமனில் முடியவைத்தார் ஸ்டப்ஸ்.
மீண்டும் சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், ஐசிசியின் புதிய விதியின்படி, சூப்பர் ஓவர் எத்தனை முறை சமனில் முடிந்தாலும் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படவேண்டும் என்ற நிலையில், மீண்டும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். சூப்பர் ஓவரை ஓமர்ஸாய் வீசினார். முதல் சூப்பரில் எங்கு முடித்தாரோ அதே இடத்தில் இருந்து தொடங்கிய ஸ்டப்ஸ் முதல் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
அடுத்து வந்த மில்லர் 2, 6, 6, 2 ரன்கள் விளாசினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 23 ரன்கள் குவித்தது. அடுத்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம்புகுந்த ஆப்கானிஸ்தான் அணியில் நபி ரன் ஏதும் எடுக்கவில்லை.
இரண்டாவது பந்தில் கேசவ் மஹாராஜிடம் விக்கெட்டைப் பறிகொடுத்த நபி வெளியேற அடுத்துவந்த குர்பாஸ் அதிரடியில் மிரட்டினார். புதிய வரலாறு படைக்கும் விதமாக 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் போட்டி போன்றே ஆப்கனின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது.
குர்பாஸ் தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதனால், ஆட்டத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 6-வது பந்தை வீசிய மஹாராஜ் வைடாக வீசினார். இதனால், கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசியில் குர்பாஸ் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். இதனால், ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்து இந்தத் தொடரில் இருந்து வெளியேறியது.
முதல் இன்னிங்ஸ் மற்றும் சூப்பர் ஓவர்கள் என கடைசி வரைப் போராடிய குர்பாஸ் மற்றும் ஆப்கன் வீரர்கள் சோகத்தில் கண்ணீர் விட்டனர். சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார்.
கற்றுக்குட்டி அணியாக இருந்தாலும், அதிரடியான அணுகுமுறை மற்றும் சிறப்பான ஆட்டத்தால் இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் மட்டுமின்றி, அனைத்து விதமான டி20 போட்டிகளில் தலைசிறந்தப் போட்டியாக இதுவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
SA vs AFG T20 World Cup 2026: South Africa clinched a thrilling victory over Afghanistan in a match that was decided only after two Super Overs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

