

நிரந்த பயிற்சியாளர்கள் இல்லாமல் அறிமுக டி20 உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று அசத்தியது.
முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்துள்ளன. டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அறிமுக உலகக் கோப்பையை வென்றது ஒருபுறமிருக்க, இந்திய அணிக்கென நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் கோப்பையை வென்றதே பலராலும் வியந்து பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிரேக் சேப்பலின் மீது இந்திய அணியின் ரசிகர்ள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வாரியமும் கடும் கோபத்தில் இருந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியதே அதற்கு காரணம். முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்திய அணி, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் அப்போதிருந்த பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என பலரும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கிரேக் சேப்பல் அவரது ஊதியத்துக்கேற்ற திறமையை வெளிக்காட்டவில்லை எனவும், வீரர்களை சீனியர், ஜூனியர் எனப் பிரித்து அணியின் திறமையை வீணடித்துவிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அனைத்து திசைகளிலிருந்தும் விமர்சனங்களால் சூழப்பட்ட அவர், அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் முடியும் முன்பே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்திய அணியின் பயிற்சியாளருக்கான இடம் காலியானதால், புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலைத் தொடங்கியது பிசிசிஐ. ஆனால், அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் இந்திய வீரர் ஒருவரையே பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன.
உள்நாட்டிலேயே திறமையானவர்கள் இருக்கும்போது, பிசிசிஐ எதற்காக வெளிநாட்டில் பயிற்சியாளர்களைத் தேட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அஜீத் வடேகர், மொகிந்தர் அமர்நாத் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்துள்ளதும், அவர்களது பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதுமே அவர்களது வாதத்துக்கான காரணம். மேலும், இந்திய வீரர் சந்தீப் படேல் கென்ய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டதும், அவரது பயிற்சியின் கீழ், கென்ய அணி கடந்த 2003 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியதும் உதாரணங்களாக முன்வைக்கப்பட்டன.
ஒருபுறம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்க, இந்திய அணியின் பயிற்சியாளருக்கான தேடல் முடிந்தபாடில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர்களை நியமிக்கலாம் என முடிவெடுத்த பின்பும், யாரை நியமிக்கலாம் என்பதிலும் கருத்து மோதல்கள். இந்த சூழலில், டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு முன்னாள் வீரர்களான ராபின் சிங்கை ஃபீல்டிங்குக்கும், வெங்கடேச பிரசாத்தை பந்துவீச்சு பயிற்சிக்கும் தற்காலிகமாக நியமனம் செய்தது பிசிசிஐ.
நிரந்தர பயிற்சியாளரை நியமிப்பதில் தொடர்ந்த கருத்து மோதல்கள், அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும் இல்லை. இந்த சூழலில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி, யாரும் எதிர்பாராத விதமாக அறிமுக உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நிரந்த பயிற்சியாளர்கள் இல்லாததை தடைக்கல்லாக பார்க்காமல், இளம் பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில், தங்களுக்கேற்ப தங்களுக்கான உத்திகளை தாங்களே வகுத்து கோப்பையை வசமாக்கியது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி. மொத்தத்தில் மாலுமி இல்லாவிட்டாலும் இந்த கப்பல் கரை சேரும், கப்பலை கரை சேர்த்துக் காட்டுவோம் என வென்று காட்டியது இந்திய அணி.
(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.