நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டியா? பேட்டர்கள் - சுழற்பந்துவீச்சாளர்கள் இடையேயான போட்டியா?

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி குறித்து...
நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டியா? பேட்டர்கள் - சுழற்பந்துவீச்சாளர்கள் இடையேயான போட்டியா?
Updated on
3 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நாளை (பிப்ரவரி 21) முதல் தொடங்குகிறது. கொழும்பில் பிரேமதாசா திடலில் நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

நியூசிலாந்து அணியின் பிரச்னை என்ன?

நியூசிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிக்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். நியூசிலாந்து அணியைப் பொருத்தவரையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுகிறார்கள்.

கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு அரைசதம் அடித்துள்ளனர். அதைத் தவிர்த்து, பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் நன்றாக விளையாடவில்லை.

லீக் சுற்றின் நான்கு போட்டிகளில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா 72 ரன்கள் எடுத்தார். அதில் 59 ரன்கள் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் எடுத்தது.

முதல் முறையாக கொழும்பில்...

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக கொழும்பில் விளையாடவுள்ளது அந்த அணிக்கான வெற்றி வாய்ப்புக்கு சிக்கலாக அமைந்துள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணி பிரேமதாசா திடலில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதனால், பிரேமதாசா திடலின் தன்மை குறித்து நியூசிலாந்தைக் காட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு நன்றாக தெரியும்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பிரேமதாசா திடலில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளதால், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு மிகவும் தயாராக இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

நியூசிலாந்து அணியின் பேட்டர்களை சோதிப்பதற்காக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது, சைம் ஆயுப், முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் காத்திருக்கின்றனர். இவர்களுடன் புதிதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவும் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை நியூசிலாந்து எவ்வாறு சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை. பவர்பிளேவில் டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் அதிரடியான தொடக்கத்தை தரும் நிலையில், மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு 180 ரன்கள் குவிப்பது சவாலான இலக்காக இருக்கும்.

பேட்டிங்கில் பாகிஸ்தான் எப்படி?

பிரேமதாசா திடலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும், அந்த அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் கவலையளிப்பதாகவே உள்ளது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக அவர் மட்டுமே தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 220 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக ஷாகிப்ஸதா ஃபர்ஹானுக்கு அடுத்தபடியாக ஷதாப் கான் அதிக ரன்கள் எடுத்துள்ளார். அவர் 88 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் தற்போதைய பேட்டிங் பலனளிக்காது. அணியில் உள்ள பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, பாகிஸ்தான் அணியால் வெற்றியை வசப்படுத்த முடியும்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அணி நிர்வாகத்துக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மூத்த வீரர் பாபர் அசாமின் ஃபார்ம் அவர்களுக்கு மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டி20 வடிவிலான போட்டிகளுக்கு ஏற்றவாறு அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாபர் அசாம் நன்றாக செயல்படவில்லையென்றால், அவருக்குப் பதிலாக ஃபகர் ஸமானை அணியில் சேர்க்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராக உள்ளது.

வேகப் பந்துவீச்சு எடுபடுமா?

இலங்கையில் பிரேமதாசா திடல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதைப் பார்க்க முடிந்தது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் 18 ஓவர்களை வீசினர். அந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி 31 ரன்களை வாரி வழங்கினார். மேலும், நமீபியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் பிளேயிங் லெவனில் ஷாகின் ஷா அஃப்ரிடி சேர்க்கப்படவில்லை. இதிலிருந்து இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் அடங்கிய நியூசிலாந்து அணிக்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, ஜேக்கோப் டஃபி மற்றும் ஜேம்ஸ் நீஷம் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சில் அவர்கள் யுக்திகளை வகுத்து சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். நெருக்கடி அளிக்கும் விதமாக அவர்கள் பந்துவீச தவறும்பட்சத்தில், சுழற்பந்துவீச்சாளர்கள் மீதான அழுத்தம் அதிகமாகிவிடும்.

நியூசிலாந்து அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஈஷ் சோதி இடம்பெற்றுள்ளனர். பகுதி நேர சுழற்பந்துவீச்சு தெரிவுகளாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் உள்ளனர்.

நியூசிலாந்து அணியைக் காட்டிலும் பாகிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சு தெரிவுகள் அதிகம் இருப்பது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான போட்டியா? அல்லது சுழற்பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் இடையேயான போட்டியா? என்று தோன்றும் அளவுக்கு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com