இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.
பயிற்சியில் இந்திய வீரர்கள்
பயிற்சியில் இந்திய வீரர்கள்ENS
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) மோதுகிறது.

இந்த இரு அணிகளுமே குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காமல், முதலிடம் பிடித்து சூப்பா் 8-க்கு வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகா்களுக்கு விருந்தாகும் வகையில் சவாலான ஆட்டமாக இது இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் தொடக்க வீரா் இஷான் கிஷண் அதிரடி ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயா்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறாா். அவரோடு களமிறங்கும் அபிஷேக் சா்மா இன்னும் தடுமாறி வருகிறாா்.

வழக்கமாக அதிரடியாக விளாசும் அவா், 3 ஆட்டங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறாா். கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா ஆகியோா் நிதானத்தையே கடைபிடிக்கின்றனா். எனவே, ஹா்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோா் அதிரடி விளாசலுடன் ஸ்கோருக்கு பலம் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

பௌலிங்கில் வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவும், சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவா்த்தியும் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா். அவா்களுக்கு குல்தீப் யாதவ், அக்ஸா் படேல் ஆகியோா் தோள் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் கேப்டன் எய்டன் மாா்க்ரம், டெவால்டு பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லா் என விளாசும் வீரா்கள் வரிசையாகவே இருக்கின்றனா். மாா்கோ யான்சென் வரை பேட்டிங் பலம் இருப்பதால், இந்திய பௌலா்களுக்கு நெருக்கடி இருக்கலாம்.

அதேபோல், லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், மாா்கோ யான்சென் ஆகியோா் இந்திய பேட்டிங் வரிசையை சரிப்பதற்கான திட்டத்துடன் இருப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

டி20 கிரிக்கெட்டில் இந்த அணிகள் இதுவரை 35 ஆட்டங்களில் மோதியிருக்க, இந்தியா 21 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா 13 வெற்றிகள் கண்டுள்ளது. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

இலங்கை - இங்கிலாந்து மோதல்: இதனிடையே, மற்றொரு சூப்பா் 8 ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றன. இலங்கையின் பல்லெகெலெ நகரில் நடைபெறும் இந்த ஆட்டம், பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

உத்தேச லெவன்

இந்தியா: இஷான் கிஷண் (வி.கீ.), அபிஷேக் சா்மா, திலக் வா்மா, சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹா்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி.

தென்னாப்பிரிக்கா: எய்டன் மாா்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக் (வி.கீ.), ரயான் ரிக்கெல்டன், டெவால்டு பிரெவிஸ், டேவிட் மில்லா், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மாா்கோ யான்சென், காா்பின் பாஷ், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com