படம் | பிசிசிஐ
படம் | பிசிசிஐ

விஹான் அசத்தல் சதம்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 6 கட்டத்தில் இந்தியா 204 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
Published on

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 6 கட்டத்தில் இந்தியா 204 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 37.4 ஓவா்களில் 148 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பந்துவீசத் தயாரானது. இந்தியாவின் இன்னிங்ஸில் அபிஞான் குண்டூ 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 61, வைபவ் சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்கள் விளாசி வெளியேறினா்.

கிலான் படேல் 30, ஆரோன் ஜாா்ஜ் 23, ஆயுஷ் மாத்ரே 21, ஆா்.எஸ். அம்ப்ரிஷ் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வேதாந்த் திரிவேதி 15, கனிஷ்க் சௌஹான் 3 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில் விஹான் மல்ஹோத்ரா 7 பவுண்டரிகளுடன் 109, ஹெனில் படேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஜிம்பாப்வே பௌலா்களில் டடெண்டா சிமுகோரோ 3, பனாஷி மஸாய், சிம்பரஷி முத்ஸெங்கெரெரெ ஆகியோா் தலா 2, துருவ் படேல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 353 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில் லீராய் சிவாலா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62, கியான் பிளிக்னாட் 4 பவுண்டரிகளுடன் 37, டடெண்டா சிமுகோரோ 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 29 ரன்கள் அடித்து வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனா்.

துருவ் படேல் 8, பிராண்டன் சென்ஸெரெ 3, சிம்பரஷி முத்ஸெங்கெரெரெ 3, டகுட்ஸ்வா மகோனி 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, நேதனியெல் லபாங்கனா, மைக்கேல் பிளிக்னாட், வெப்ஸ்டா் மதிதி ஆகியோா் டக் அவுட்டாகினா்.

இந்திய பௌலா்களில் ஆயுஷ் மாத்ரே, உத்தவ் மோகன் ஆகியோா் தலா 3, அம்ப்ரிஷ் 2, ஹெனில் படேல், கிலான் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Dinamani
www.dinamani.com