புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்: எதிரணிகளுக்கு மெஸ்ஸி எச்சரிக்கை!

நாங்கள் எப்படி முதல் சுற்றிலேயே வெளியேற முடியும்? அதற்கான அணி அல்ல இது...

News image
Updated On :27 ஜூன் 2018, 7:10 am

முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா, சில ஆட்டங்கள் தவிர, இந்த கால்பந்து உலகக் கோப்பை ஆட்டங்கள் போர் அடிப்பதாகப் படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டின் நடு ஓவர்கள் போல என்று ட்வீட்டை வெளியிட்டுக் கூடவே விமரிசனங்களையும் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டார். 

உண்மையிலேயே, உலகக் கோப்பை ஆரம்பித்தபின்பு இந்தியாவில் அதன் பரபரப்பு சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், ஐஸ்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தை வெல்ல முடியாமல் ஆர்ஜென்டீனா அணி டிரா செய்தபோது இந்திய ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்த ஆட்டத்தில் குரோஷிய அணியிடம் தோற்க, அவ்வளவுதான். எங்குப் பார்த்தாலும் உலகக் கோப்பை பற்றிய பேச்சும் ஆர்ஜென்டீனாவுக்கு என்ன ஆகும் என்கிற கவலையும்தான் அதிகமாகத் தென்பட ஆரம்பித்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இந்த உலகக் கோப்பைப் போட்டி அதிகக் கவனம் பெற்றதற்கு ஆர்ஜென்டீனா அணியினரும் முக்கியமாக மெஸ்ஸியும் முக்கியக் காரணங்களாக உள்ளார்கள். 

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது. 

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவோடு வந்த மெஸ்ஸி தொடக்க ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பைத் தவறவிட்டார். குரோஷியாவோடு நடந்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனா படுதோல்வி அடைந்தபோது மெஸ்ஸியின் ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. கடந்த 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா தற்போது துவக்க ஆட்டங்களிலேயே தடுமாறி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்கிற கேள்வி எழுந்தபோது பலருக்கும் மெஸ்ஸி வில்லனாகத் தெரிந்தார். எனினும் நேற்றைய ஆட்டத்தில் முதல் கோலை அடித்து தன் மீதான விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்தார் மெஸ்ஸி. 

Story image

நாங்கள் எப்படி முதல் சுற்றிலேயே வெளியேற முடியும்? அதற்கான அணி அல்ல இது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் அது இந்தளவுக்குக் கடினமாக இருக்கும் என எண்ணவில்லை. எங்களுடைய உலகக் கோப்பை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்று முதல் எங்களுக்குப் புதிய உலகக் கோப்பையாக இருக்கப்போகிறது. வாழ்க்கையில் இந்தளவுக்கு வேதனைப்பட்டதில்லை. ஆனால் தோற்றுப்போய் வெளியேறுவோம் என்று எண்ணவே இல்லை. கடவுள் எங்களுடன் உள்ளார். எங்களைக் கைவிடமாட்டார் என்று நம்பினேன் என்று இந்த வெற்றி குறித்துக் கூறியுள்ளார் மெஸ்ஸி. 

ஜூன் 30 அன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது ஆர்ஜென்டீனா. இதுபற்றி மெஸ்ஸி கூறியதாவது: பிரான்ஸ் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுடைய உலகக் கோப்பை ஆட்டங்கள் எல்லாவற்றையும் பார்த்துள்ளோம். அதனால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.