அடுத்த மேட்சில் பத்ரிநாத் ஆடுவாரா?

பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பத்ரிநாத்துக்கு அடுத்த மேட்சில் ஆட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அடுத்த மேட்சில் பத்ரிநாத் ஆடுவாரா?
Updated on
1 min read

பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பத்ரிநாத்துக்கு அடுத்த மேட்சில் ஆட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கோலியும் சூசகமாக பத்ரிநாத் ஆடுவது குறித்து பேசியுள்ளார்.

தமிழக வீரர் பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தவர். சென்னை அணிக்காக 95 போட்டிகளில் இடம்பெற்றார். 2013 ஐபிஎல் போட்டியில்கூட சென்னை அணிக்காக 18 போட்டிகளில் ஆடினார். ஆனால், சென்ற வருடம் சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதைவிடவும் 2014 ஏலத்தில் ஓர் அணியும் இவரைச் சீந்தாமல் இருந்ததுதான் ஆச்சரியத்தை அளித்தது. இது பத்ரிநாத்துக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வருடம் பத்ரிநாத்தை பெங்களூர் அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் தேர்ந்தெடுத்தது. இதனால் பத்ரிநாத் தன் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுவரை பெங்களூர் அணி ஆடிய இரு ஆட்டங்களிலும் பத்ரிநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக மந்தீப் சிங் அணியில் இடம்பெற்றார். இரு மேட்சுகளிலும் சேர்த்து 6 ரன்களே (6, 0) எடுத்துள்ளார். இதனால் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்படுமா என்று கேப்டன் விராட் கோலியிடம் கேட்டபோது "முதல் மேட்சில் மந்தீப் சரியாக ஆடுவதுபோல இருந்தது. ஆனால், அவுட் ஆகிவிட்டார். இந்தமுறை முதல் பந்திலேயே அவுட் ஆகியுள்ளார். இதனால் இதைவைத்து அவரை எடை போடமுடியாது” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "மந்தீப் சிங், பஞ்சாப் அணிக்காக மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடியவர். அவரை இன்னும் முதலிலேயே ஆடவைத்தால் அணிக்கு உதவுமா என்று பார்க்கவேண்டும். எந்த ஒரு வீரரும் சரியான இடத்தில் ஆடினால் தான் திறமையை வெளிப்படுத்தமுடியும். சர்பராஸ் கான், பத்ரிநாத் போன்ற மேலும் சில பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளார்கள். அனுபவம் வாய்ந்த பத்ரிநாத் இதுவரை ஒரு போட்டியில்கூட ஆடவில்லை. வீரர்களுக்குத் தகுந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதேசமயம் ஐபிஎல் போட்டியில் இன்னும் எவ்வளவு மேட்சுகள் ஆடவேண்டும் என்பதையும் பார்க்கவேண்டும். எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை என்பது பற்றி நாங்கள் அலசி ஆராய்வோம்” என்றார்.

மந்தீப் சிங்கின் இரு தோல்விகளால் இனி பத்ரிநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது. சென்னை போல அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ள பெங்களூர் அணியில் பத்ரிநாத் போல தடுப்பாட்டம் ஆடக்கூடிய வீரர் ஒருவர் அவசியம் தேவை என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com