

இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்கிற தமிழக அரசின் உத்தரவு இந்த வருடமும் அமல்படுத்தப் படுகிறது. அதனால் இன்று சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை வீரர் மலிங்கா விளையாட அனுமதிக்கப்படமாட்டார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை (2013-ல் தடை விதிக்கப்பட்டது. 2014-ல் சென்னையில் எந்தவொரு ஐபிஎல் போட்டியும் நடக்கவில்லை). இந்த ஆண்டும் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன் விடுத்த வேண்டுகோளை ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு ஏற்றுக்கொண்டது. இந்த வருட ஐபிஎல்-லில், ஏஞ்சலோ மேத்யூஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்), திசாரா பெரேரா (கிங்ஸ் X1 பஞ்சாப்), லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய மூன்று இலங்கை வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஐபிஎல்-லில் புள்ளிகள் பட்டியலில் நான்காவதாக இடம்பெறப் போகிற அணி எது என்கிற போட்டியில், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளன. பஞ்சாப்பும் டெல்லியும் குறைந்த புள்ளிகளைக் கொண்டிருப்பதால் அவர்களால் ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறமுடியாது. டெல்லி அணி அடுத்த 3 மேட்சுகளில் ஜெயித்தாலும் அதற்கேற்ற ரன்ரேட் இருக்கவேண்டும். மற்ற அணிகள் அதற்கேற்றாற்போல் தோற்றிருக்கவேண்டும். எனவே 4-ம் இடத்துக்கான தீவிரமான போட்டி என்பது மும்பை, ஹைதராபாத், பெங்களூரு அணிகளுக்கு இடையே தான். ராஜஸ்தான் அணி 12 மேட்சுகளில் 6 வெற்றிதான் பெற்றுள்ளது. அடுத்த 2 மேட்சுகளில் கொல்கத்தா, சென்னையை எதிர்கொள்கிறது. இரண்டிலும் தோற்றுப்போனாலும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்போதே அது 14 புள்ளிகளை வைத்துள்ளது. (இருந்தும் ரன்ரேட் விகிதம் சாதகமாக அமைந்தால் டெல்லிக்கு வாய்ப்புள்ளது.) சென்னையும், கொல்கத்தாவும் கிட்டத்தட்ட ஃப்ளே ஆப் பக்கம் நெருங்கிவிட்டன.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையில் மலிங்கா இல்லாமல் சென்னையைச் சந்திக்கிறது மும்பை அணி. புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது மும்பை. ஆரம்பத்தில் சுமாராக பந்துவீசிய மலிங்கா, கடந்த சில மேட்சுகளில் அட்டகாசம் செய்துவருகிறார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் தமிழக அரசின் முடிவை டெல்லி அணியின் நிர்வாகம் குறை கூறியது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகர் டி.ஏ. சேகர் இதுபற்றி கூறியதாவது:
"எங்கள் அணியைச் சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸால் சென்னையில் நடைபெறுகிற போட்டியில் கலந்துகொள்ள முடியாது. அவர் குறைந்த விலைக்கு வாங்கப்படவில்லை. அவரை 7.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தோம். அவரை தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஆல்பி மார்கலுடன் இணைந்து விளையாட வைப்பதற்காகவே தேர்ந்தெடுத்தோம். ஒரு வீரரை உங்கள் அணியில் விளையாட வைக்க முடியாது என்றால் அது பின்னடைவாகவே இருக்கும். மலிங்காவால் மும்பை அணிக்கு விளையாட முடியாமல் போனால் அவர்களுக்கும் அது பின்னடைவாகவே இருக்கும்" என்றார்.
மலிங்கா இல்லாத மும்பை அணி என்பது எதிரணிக்கு வரப்பிரசாதம். மும்பை அணி ப்ளே ஆப்-புக்கு நுழைய இந்தப் போட்டி முக்கியமானதாகும். இதில் தோற்றுப்போனால், பிறகு அடுத்து வருகிற 3 மேட்சுகளிலும் வெற்றி பெறவேண்டிய நிலைமை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.