சென்னை அணியை அதிரவைத்த 'சிக்ஸர்' பாண்ட்யா!

சென்னை அணி வலுவான நிலைமையில் இருந்தபோது மூன்று சிக்ஸர்கள் உள்பட எட்டு பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்
சென்னை அணியை அதிரவைத்த 'சிக்ஸர்' பாண்ட்யா!
Updated on
1 min read

ஐபிஎல் ஏலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. இப்போது விலைமதிப்பில்லாத ஒரு வெற்றியை மும்பை அணிக்கு அளித்துள்ளார். பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னையைத் தோற்கடித்ததால் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மும்பை. 4-வது அணியாக ப்ளே ஆஃப்புக்குத் தகுதி பெற மற்ற சில அணிகளை விடவும் மும்பைக்கே அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல்-லின் மகத்துவமே இளம் வீரர்கள் பலர் அடையாளம் பெறுவதுதான். ஸ்ரேயாஸ் ஐயர், சர்ப்ராஸ் கான், சூர்யகுமார் யாதவ், ஹூடா, நெகி, சஹால் என இந்த ஐபிஎல்-லில் அசத்திவரும் இளம் வீரர்களின் வரிசையில் மும்பை அணியின் பாண்ட்யாவின் இணைந்துவிட்டார்.

21 வயது பாண்ட்யா, பரோடவைச் சேர்ந்தவர். 2013 முதல் பரோடா அணிக்காக ரஞ்சிப் போட்டியில் ஆடிவருகிறார். 6 முதல்தரப் போட்டிகளில் ஆடியும் இதுவரை பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்கிறார் என்கிற பேச்சு அவர் மீதான கவனத்தை அதிகரித்தது. அதனால்தான் மும்பை அணியும் ஏலத்தில் அவரைத் தேர்ந்தெடுத்தது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வலுவான நிலைமையில் வெற்றிக்கு மிக அருகில் இருந்தபோது மூன்று சிக்ஸர்கள் உள்பட எட்டு பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிக்காட்டினார் பாண்ட்யா.

ரோஹித் சர்மா அவுட் ஆனவுடன் அவர் பெவிலியனை நோக்கி சைகை காண்பித்தார். அடுத்ததாக ஹர்பஜன் சிங் வேண்டாம், பாண்ட்யா களம் இறங்கட்டும் என்று சைகையால் உணர்த்தினார். அப்போது மும்பை அணிக்கு 17 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 19-வது ஓவரில் தான் யார் என்பதை உலகுக்கு உணர்த்தினார் பாண்ட்யா. அதுவரை சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த நெகியின் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார்(4 பந்துகளில்). அவ்வளவுதான், அந்த ஒரு ஓவர் பாண்ட்யாவைப் பிரபலம் ஆக்கிவிட்டது. அந்த மேட்சில் பலர் கேட்ச்சுகளை நழுவவிட்டபோதும் பாண்ட்யா, மூன்று கேட்ச்சுகளைப் பிடித்து சென்னையின் முக்கியமான வீரர்களை அவுட் ஆக்கினார்.

‘பயிற்சியாளர் பணியை ஆரம்பித்ததிலிருந்து நான் பாண்ட்யாவுடன் நெருக்கமாக உள்ளேன். அதிரடியாக ஆடுவதற்குப் பயப்படுவதேயில்லை. நிறைய திறமைகள் உள்ளன. அவருடைய பவுலிங்கை இதுவரை நாம் பார்க்கவில்லை. அதுவும் சிறப்பாக உள்ளது. அவர் சிக்ஸர் அடிக்கும் திறமையை சென்னைக்கு எதிரான மேட்சில் மட்டுமல்ல, பெங்களூருக்கு எதிரான மேட்சிலும் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்து நிரூபித்தார். நல்ல எதிர்காலம் உள்ள இளம் வீரர். அவருடன் பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி.’ என்று பாண்ட்யாவை வியக்கிறார் மும்பை அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com