உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல்-லில் உஷாராக விளையாடும் இந்திய வீரர்கள்!

பேட்ஸ்மேன்கள் பலர் இந்த ஐபிஎல்-லில் தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் கட்டுக்கோப்பாக விளையாடி வருகிறார்கள்..
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல்-லில் உஷாராக விளையாடும் இந்திய வீரர்கள்!
Updated on
2 min read

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று தேர்வு செய்யப்படும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணித் தேர்வு அடுத்த வாரம் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்படவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ஏப்ரல் 23-க்கு முன்பு, அணிகள் வீரர்களின் பட்டியலின் வெளியிடவேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஏழு நாள்களுக்கு முன்புவரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்குப் பிறகு ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் உலகக் கோப்பைத் தொழில்நுட்பக் குழுவின் அனுமதி பெறவேண்டும். 

இந்நிலையில் இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் இந்த ஐபிஎல்-லில் தங்களது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் கட்டுக்கோப்பாக விளையாடி வருகிறார்கள். சிறந்த உதாரணமாக ராகுல், ராயுடு, தினேஷ் கார்த்திக் போன்றவர்களைச் சொல்லலாம். உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதால் அதிரடி ஆட்டத்தால் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது, அதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என உஷாராக விளையாடி வருகிறார்கள்.

உதாரணமாக இந்த வீரர்களின் இரு வருட ஐபிஎல் ஸ்டிரைக் ரேட்டுகள், சிக்ஸர் அடிக்கும் விதம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்:

 வீரர்கள் 2018   ஸ்டிரைக்   ரேட் 2019   ஸ்டிரைக்   ரேட் 2018 சிக்ஸர்/   ஆட்டம்  2019 சிக்ஸர்/   ஆட்டம் 
 ராகுல்  158.41 122.59 2.28 0.66
 ராயுடு  149.75 77.46 2.12 0.40
 ரிஷப் பந்த் 173.60 172.54 2.64 1.66
 தினேஷ்   கார்த்திக்  147.77 128.57 1.00 0.75
 ஷிகர்   தவன் 136.91 116.03 0.87 0.33
 ரஹானே 118.21 126.53 0.35 0.60
 விஜய்   சங்கர் 143.24 131.00 1.00 1.00
 பாண்டியா  133.33 178.94 0.84 1.60
 ஜாதவ் 109.09 96.36 2.00 0.25
 ஜடேஜா 120.27 75.00 0.40 0.33

சமீபத்தில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஐபிஎல்-லில் இந்திய வீரர்களின் பேட்டிங் குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டார். ஏப்ரல் 15-க்குப் பிறகு ஐபிஎல்-லில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் அணுகுமுறையைக் கவனியுங்கள். அந்தத் தேதியில்தான் இந்திய உலகக்கோப்பை அணி அறிவிக்கப்படவுள்ளது என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

இவர் சொல்வது மிகச்சரி. மேலே உள்ள புள்ளிவிவரங்களைக் கண்டாலே இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து, அதனால் ஆட்டமிழந்து தங்களுக்கான உலகக் கோப்பை வாய்ப்புகளை இழக்கக்கூடாது என ராகுல், ஷிகர் தவன், ராயுடு, விஜய் சங்கர், ஜடேஜா போன்ற வீரர்கள் இந்த வருட ஐபிஎல்-லில் மிகக் கவனமாக, நிதானமாக விளையாடி வருவதைக் காணமுடிகிறது. ராகுல், ராயுடுவின் கடந்த வருட ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாம் இன்னும் கண்ணில் நிற்கின்றன. ஆனால் இருவருமே நிதானமாக, அதிரடியைக் குறைத்து விளையாடி வருகிறார்கள். இருவருமே கடந்த வருடம் சராசரியாக ஓர் ஆட்டத்துக்கு 2 சிக்ஸர் அடித்தார்கள். இந்த வருடம் அதுவும் மிகவும் குறைந்துவிட்டது. இருவருக்குமே இந்திய அணியில் இடம் கிடைப்பது சிக்கலாக இருப்பதால் நிலைமையைப் புரிந்துகொண்டு விளையாடி வருகிறார்கள். 

ரிஷப் பந்துடன் போட்டி போட்டும் தினேஷ் கார்த்திக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் இந்த வருடம் விளையாடி வருகிறார். இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்கிற நிலையில் ஐபிஎல்-லில் ஃபார்முடன் இருப்பது முக்கியமாகப் படுகிறது. ரஹானே கடந்த வருடம் போல இந்த வருடமும் நிதானமான, சற்றே அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். கடந்த வருடம் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே ஆடியதால் ஜாதவின் ஆட்டத்தை அலசமுடியவில்லை. எனினும் அவரும் நூறுக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டிலேயே விளையாடி வருகிறார். ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறுவதும் கேள்விக்குறியாக இருப்பதால் ஜடேஜாவுக்கும் ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடுவது அவசியமாக உள்ளது. விஜய் சங்கருக்கு இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையிலும் அவராலும் பெரிதளவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியவில்லை. ஒருவேளை முடிவுகள் தெரிந்தபிறகு அடுத்த வாரம் முதல் அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். 

அதிரடி ஆட்டத்தில் வித்தியாசம் காண்பிக்காதவர்கள் பாண்டியாவும் ரிஷப் பந்தும்தான். இருவருமே உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்கிற பயமின்றி அதிரடியான ஆட்டத்தை வழக்கம் போல வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களுடைய இந்த அணுகுமுறைதான் மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுகிறது.

ஐபிஎல் ஆட்டங்களைக் கொண்டு உலகக் கோப்பைக்கான வீரர்களின் தேர்வு இருக்காது எனத் தேர்வுக்குழு அறிவித்தாலும் வீரர்களின் இந்த உத்தியும் அணுகுமுறையும் அவர்களுக்குக் கைகொடுக்குமா? இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com