பவர்பிளே பகுதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஒப்புதல்!

அடுத்த வருடம் இந்தக் குறையைச் சரிசெய்யவுள்ளோம். பவர்பிளே பகுதியில்தான் நாங்கள் நிறைய ஆட்டங்களை இழந்துள்ளோம்...
பவர்பிளே பகுதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஒப்புதல்!
Published on
Updated on
1 min read

ஷுப்மன் கில், கிறிஸ் லீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா,பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையே மொஹாலியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது பஞ்சாப். அடுத்து ஆடிய கொல்கத்தா, 18 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 185 ரன்களை எடுத்து வென்றது. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது கொல்கத்தா.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பேசியதாவது:

இந்த வருடம் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஏலத்தில் நாங்கள் தேர்வு செய்த வீரர்கள் சிலர் காயமடைந்தார்கள். நாங்கள் முடிந்தளவு முயற்சி செய்தோம். நிறைய நல்ல விஷயங்களும் நடைபெற்றுள்ளன.

நாங்கள் பவர்பிளே பகுதியில் சரியாக விளையாடாததைக் குறையாகக் காண்கிறேன். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும். கடந்த வருடம் கெய்லும் ராகுலும் பவர்பிளே ஓவர்களில் ஏராளமான ரன்களைக் குவித்தார்கள். ஆனால் இந்தமுறை அதுபோல அவர்களால் விளையாடமுடியவில்லை. அவர்களுக்கும் நிறைய அழுத்தங்கள் இருந்தன. அடுத்த வருடம் இந்தக் குறையைச் சரிசெய்யவுள்ளோம். பவர்பிளே பகுதியில்தான் நாங்கள் நிறைய ஆட்டங்களை இழந்துள்ளோம். நடு மற்றும் கடைசி ஓவர்களில் தான் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். முஹமது ஷமியும் சாம் கரணும் அற்புதமாகப் பந்துவீசினார்கள்.

ஆண்ட்ரூ டை பவர்பிளே பகுதியில் நிறைய ரன்களை வழங்கினார். கடந்த வருடம் அற்புதமாகப் பந்துவீசினார். இப்போது அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள புதிய அணுகுமுறைகளுடன் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளார்கள். இதுபோன்ற தருணங்களைப் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்வது சகஜம். இதன் மூலம் அவர் பாடம் கற்றுக்கொண்டு இன்னும் சிறந்த கிரிக்கெட் வீரராக முன்னேறுவார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com