ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆர்சிபிக்கு அடித்த அதிர்ஷ்டம்: தொடர்ச்சியாக நான்கு தோல்விகள் அடைந்தும் பிளேஆஃப்புக்குத் தகுதி!

10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி...

News image
Updated On :3 நவம்பர் 2020, 5:12 am

DIN

கடைசி நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.

2016-ல் லீக் சுற்றின் முடிவில் 2-ம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப்புக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல கடைசி நான்கு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்றிருக்கிறது ஆர்சிபி அணி. எனினும் கைவசம் 14 புள்ளிகளைக் கொண்டுள்ளதால் பிளேஆஃப்புக்கு தகுதியடைந்துள்ளது. கடைசியாக கொல்கத்தாவுக்கு எதிராக அக்டோபர் 21 அன்று எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன்பிறகு சென்னை, மும்பை, ஹைதராபாத், தில்லி ஆகிய அணிகளிடம் வரிசையாகத் தோற்றுள்ளது. 

10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி, 14 ஆட்டங்களின் முடிவிலும் 14 புள்ளிகளே பெற்றுள்ளது. நல்லவேளையாக இதர அணிகளும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் ஆர்சிபி அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடிந்துள்ளது. முக்கியமாக பஞ்சாப் அணி கடைசி இரு ஆட்டங்களிலும் தோற்றது ஆர்சிபி போன்ற இதர அணிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது. 

எனினும் ஐபிஎல் கோப்பையை வெல்ல அடுத்து தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களை ஆர்சிபி அணி வென்றாக வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்காததால் இரு வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இனிமேல் அதிர்ஷ்டம் ஆர்சிபி அணிக்குக் கை கொடுக்காது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.