
ஐபிஎல் 2020 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வால்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.
முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2-ஆவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாப் அணி 6-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வால். இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கேப்டன் ராகுலை அவர் தாண்டியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ராகுல் 17 ரன்களும் அகர்வால் 25 ரன்களும் எடுத்தார்கள்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 246 ரன்களுடன் முதலிடத்தில் மயங்க் அகர்வாலும் 239 ரன்களுடன் ராகுல் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். இருவரும் தலா 1 சதத்தை இந்த வருடப் போட்டியில் எடுத்துள்ளார்கள். இதன்மூலம் ஆரஞ்சு தொப்பி, மயங்க் அகர்வால் வசம் தற்போது உள்ளது.
இதுபற்றி ராகுல் கூறியதாவது:
ஆரஞ்சுத் தொப்பி பஞ்சாப் அணியினரிடம் இருந்தால் மகிழ்ச்சி தான். மயங்க் அகர்வால் நன்கு உழைத்துள்ளார். அதனால் இந்தப் பெருமையை அடைந்துள்ளார். அவரிடமிருந்து அந்தத் தொப்பியை விரைவில் பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.