

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கியது. நேற்றுடன் 10 நாள்கள் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏராளமான பொழுதுபோக்கையும் பரபரப்பையும் அளித்துள்ளது. 10 நாள்களுக்கே இப்படியா என எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான பிரச்னைகளையும் மனநலப் பாதிப்புகளையும் ரசிகர்கள் சந்தித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டியால் சகஜ நிலைமைக்குத் மீண்டும் திரும்பிவிட்டது போன்ற உணர்வைப் பெற்றுள்ளார்கள். இதற்காக ஐபிஎல்-லுக்குப் பலரும் சமூகவலைத்தளங்களில் நன்றி தெரிவித்துள்ளார்கள். விளையாட்டின் நோக்கமே ரசிகர்களைச் சந்தோஷப்படுத்துவதுதானே!
இந்த வருட ஐபிஎல் பரபரப்பாக இருக்கப் போகிறது என்பதை முதல் 10 நாள்களே சொல்லிவிட்டன.
இதுவரை நான்கு அணிகள் தலா 3 ஆட்டங்களும் இதர நான்கு அணிகள் தலா 2 ஆட்டங்களும் விளையாடியுள்ளன. இதில் முழு ஆதிக்கம் செலுத்துகிறது என்று எந்த அணியையும் சொல்ல முடியாத அளவுக்கு எல்லா அணிகளும் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளன. ராஜஸ்தானும் தில்லியும் மட்டும்தான் தலா 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் மட்டும்தான் 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியும் பெறாமல் உள்ளது. இதர அணிகள் எல்லாம் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்து அடுத்தக்கட்டத்துக்குத் தயாராகி வருகின்றன. புள்ளிகள் பட்டியலைப் பார்த்தால் மிரட்சியாக இருக்கிறது. முதல் நான்கு இடங்களுக்கான போட்டி இந்தமுறை கடுமையாக இருக்கப் போகிறது.
* 10 நாள்களில் 2 சூப்பர் ஓவர்கள்! தில்லி - பஞ்சாப் மற்றும் பெங்களூர் - மும்பை அணிகள் விளையாடிய ஆட்டங்கள் டை ஆகி சூப்பர் ஓவர் வரைக்கும் சென்றன.
பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்தபோதும் 19.3 ஓவர்களில் இலக்கை அடைந்து சாதனை செய்தது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச இலக்கை விரட்டிய அணி என்கிற பெருமையை அடைந்தது. இதற்கு முன்பு 2008-ல் ராஜஸ்தான் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 215 ரன்கள் இலக்கை விரட்டியதே சாதனையாக இருந்தது.
* இரு இந்திய வீரர்கள் இந்த 10 நாள்களுக்குள் சதம் அடித்துள்ளார்கள். கேஎல் ராகுல் 132*, மயங்க் அகர்வால் 106 ரன்கள் எடுத்தார்கள். நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் 99 ரன்கள் எடுத்தார்.
* கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் இலக்கு இருந்தாலும் அதை வெற்றிகரமாக அடையும் திறமையை அணிகள் பெற்றுள்ளன. இத்தனைக்கும் ரஸ்ஸலின் அதிரடி ஆட்டம் இன்னும் தொடங்கவில்லை.
பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்குக் கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டன. 19.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது ராஜஸ்தான் அணி. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த தெவாதியா ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்தார்.
பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் தேவைப்பட்டன. மும்பை அணி 89 ரன்கள் அடித்து டை செய்து, பிறகு சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது.
ஒன்று மட்டும் நிச்சயம், நவம்பர் 10 வரை ரசிகர்களுக்குத் திகட்ட திகட்ட விருந்து இருக்கிறது.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| தில்லி | 2 | 2 | 0 | 4 | +1.100 |
| ராஜஸ்தான் | 2 | 2 | 0 | 4 | +0.615 |
| பெங்களூர் | 3 | 2 | 1 | 4 | -1.450 |
| பஞ்சாப் | 3 | 1 | 2 | 2 | +1.498 |
| மும்பை | 3 | 1 | 2 | 2 | +0.654 |
| கொல்கத்தா | 2 | 1 | 1 | 2 | -0.767 |
| சென்னை | 3 | 1 | 2 | 2 | -0.840 |
| ஹைதராபாத் | 2 | 0 | 2 | 0 | -0.730 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.