ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவது வருத்தமாக உள்ளது: விடியோவில் வேதனையை வெளிப்படுத்திய நடராஜன்

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகுகிறேன். மிகவும் வருத்தமாக உள்ளது...
படம் - youtube.com/user/SunrisersIPL
படம் - youtube.com/user/SunrisersIPL

முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருப்பதால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 8.02. 

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடிய நடராஜன் 1/37, 1/32 எனப் பந்துவீசியிருந்தார். அதன்பிறகு சன்ரைசர்ஸ் விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடராஜன். இதுதொடர்பான விடியோவில் அவர் கூறியதாவது:

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகுகிறேன். மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த வருடம் நன்றாக விளையாடினேன். இந்த வருட ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் எதிர்பார்ப்புடன் இருந்தேன். முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது. இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி வெல்லவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com