தோனியும், விசிலும்..: ஆசையை நிறைவேற்றி விசில் அடிக்க வைத்த உத்தப்பா!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து ஒரு கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி விசில் அடிக்கத் தெரியாதபோதிலும், சொன்னபடியே ரசிகர்களை விசில் அடிக்க வைத்துள்ளார் உத்தப்பா.
தோனியும், விசிலும்..: ஆசையை நிறைவேற்றி விசில் அடிக்க வைத்த உத்தப்பா!


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து ஒரு கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி விசில் அடிக்கத் தெரியாதபோதிலும், சொன்னபடியே ரசிகர்களை விசில் அடிக்க வைத்துள்ளார் உத்தப்பா.

கர்நாடகத்தைச் சேர்ந்த ராபின் உத்தப்பா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2008-இல் மும்பை இந்தியன்ஸுக்காகவும், 2009, 2010-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காகவும் விளையாடினார். இதன்பிறகு, புனே வாரியர்ஸ் அணிக்காகத் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் விளையாடினார்.

பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் உத்தப்பா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான்.

இவர் 2019-க்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் தேர்வானார். 2020 ஐபிஎல் தொடர் இவருக்கு சரியாக அமையவில்லை. 12 ஆட்டங்களில் விளையாடி 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 16.33. ஸ்டிரைக் ரேட் 119.51.

வழக்கம்போல் வயது காரணமாக அணியிலிருந்து புறக்கணிப்பட்டார்.

இந்தப் புள்ளியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இணைகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2020 ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப்புக்கு முன்னேறாத ஒரே சீசன் 2020 தான்.

2018-இல் கோப்பை வென்றபோதும் சரி, 2019-இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் சரி, 30 வயத்தைத் தாண்டிய பெரும்பாலானோரை வைத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் சாதித்தது. ஆனால், 2020-இல் சந்தித்த தோல்வி, அணியில் பெரும்பாலானோர் 30 வயததைத் தாண்டியிருப்பதே என்ற விமர்சனத்தைச் சம்பாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதனால், அடுத்த சீசனில் சாதிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் மாற்றத்தைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது. தோனியும் கடந்த சீசன் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறினார்.

ஆனால், மீண்டும் 35 வயது உத்தப்பாவை ராஜஸ்தானிடமிருந்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். 2020 சீசன் தோல்வி விரக்தியிலிருந்து மீளாத ரசிகர்கள், மீண்டும் எரிச்சலுக்குள்ளானார்கள். இம்முறையும் கோப்பையைத் தவறவிடப் போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ், தோல்விக்குப் பிறகும் இளைஞர்களை நோக்கி நகராமல் பாடம் கற்பிக்கத் தவறுகிறது அணி நிர்வாகம் என்பது போன்ற பேச்சுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது.

உத்தப்பாவின் ஆசை:

இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அணிக்குத் தேர்வானது குறித்து விடியோ வெளியிடுகிறார் உத்தப்பா. அதுவும் தமிழில் பேசிய விடியோ.

அதில் அவர் பேசியது, 

"உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆசை நிறைவேறிய தருணம் இது. நான் தோனியுடன் இணைந்து விளையாடி 12, 13 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஒரு ஆசை இருந்தது. அவர் ஓய்வு பெறும் முன் அவருடன் இணைந்து விளையாடி மீண்டும் ஒரு தொடரை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடக் கிடைத்த வாய்ப்பை நான் வரமாகப் பார்க்கிறேன்."

அதுமட்டுமல்ல, நான் உடன் வளர்ந்த அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோருடன் விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 17 வயதுக்குள்பட்ட கிரிக்கெட்டிலிருந்து அவர்களுடன் இணைந்து விளையாடி வருகிறேன்.

அதனால், சென்னை சூப்பர் கிங்ஸின் அங்கமாக இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி.

வாய்ப்பு கிடைத்தால், கஷ்டப்பட்டு நன்றாகவே விளையாடுவேன். அதை எதிர்நோக்கிதான் உள்ளேன். எனக்கு விசில் போடத் தெரியாது, ஆனால், உங்களை விசில்போட வைப்பேன்."

சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்ற பிறகு, மறுபயணம் செய்து இந்த விடியோவைப் பார்க்கும்போது ரசிகர்களை நிச்சயம் நெகிழ்ச்சியடைச் செய்யும். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் உத்தப்பாவும் பெரும் பங்காற்றியுள்ளார். அதை மனதில் கொண்டு தோனி ஓய்வு பெறும் முன் மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து விளையாடி கோப்பை வெல்ல வேண்டும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். 

சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தேர்வாகி வெறுமன அணியிலிருந்தபடியே மட்டும் அவர் தனது ஆசையை நிறைவேற்றவிடவில்லை. பிளே ஆஃப் சுற்றில் உத்தப்பாவின் பங்கு என்பது நிகரற்றது.

குவாலிஃபையர் 1:

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1-இல் சென்னையின் பலமான தொடக்க பாட்னர்ஷிப்பை 4-வது பந்திலேயே பிரித்தது டெல்லி.

ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாத அளவுக்கு சிறப்பான பதிலடி தந்து நெருக்கடியை டெல்லி பக்கமே திருப்பிவிட்டு, ஆட்டத்தை சென்னை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பெரும் பங்காற்றினார். முதல் விக்கெட் விழுந்தபிறகு, அடுத்த 110 ரன்களுக்கு அடுத்த விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு 44 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார் உத்தப்பா.

இறுதிப் போட்டி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் தனது பணியைக் கச்சிதமாகச் செய்தார் உத்தப்பா. கொல்கத்தாவின் பலமே சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்திதான்.

பவர் பிளேவுக்குப் பிறகு சென்னை ரன் ரேட்டைக் கட்டுப்படுத்த சுழற்பந்துவீச்சைக் கையில் எடுத்தது கொல்கத்தா. பெரும்பாலான ஆட்டத்தின் முடிவு நடுஓவர்களில்தான் தீர்மானிக்கப்படும்.

ரன் ரேட்டை உயர்த்த முயன்று கொல்கத்தா வலையில் வீழ்ந்த ருதுராஜ் கெய்க்வாட், சுனில் நரைன் சுழலில் ஆட்டமிழந்தார்.

இந்த முறையும் 3-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய உத்தப்பா, துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட் நெருக்கடியாக மாறிவிடாதவாறு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். மாறாக நெருக்கடி கொல்கத்தாவிடம் இருந்து. இதனால், நடு ஓவர்களில் சென்னையின் ரன் ரேட் பெரும் சரிவைச் சந்திக்கவில்லை.

15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வெல்ல உத்தப்பாவின் இந்த இரண்டு இன்னிங்ஸுமே மிகமிக முக்கியமானது. இந்த முக்கியமான இன்னிங்ஸின் பின்னணியிலிருந்தது தோனியுடன் இணைந்து ஒரு கோப்பை வெல்ல வேண்டும் என்கிற ஆசையும், தனக்கு விசில் அடிக்கத் தெரியாத போதிலும் ரசிகர்களை விசில் அடிக்க வைப்பேன் என்கிற தன்னம்பிக்கை வாக்குறுதியும்தான்.

தோனியுடன் இணைந்து கோப்பை வென்று சாதித்துவிட்டார். ரசிகர்களையும் விசில் அடிக்கச் செய்துவிட்டார். உத்தப்பா உத்தப்பாதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com