கரோனாவால் இரு அணிகள் பாதிப்பு: ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா?

கரோனா வைரஸ் பாதிப்பால் இரு அணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2021 போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தில்லி வீரர் பிரித்வி ஷா (கோப்புப் படம்)
தில்லி வீரர் பிரித்வி ஷா (கோப்புப் படம்)

கரோனா வைரஸ் பாதிப்பால் இரு அணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2021 போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா். இவா்களுடன் சோ்த்து தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ அறிவித்தது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆமதாபாத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் இன்றிரவு நடைபெற இருந்தது. எனினும் கேகேஆர் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பு இன்று அறிவித்தது. 

இரு கேகேஆர் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு என்பதால் இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. கரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை. 

மேலும் தில்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் - ஹைதராபாத்தில் ஆட்டத்தில் பணியாற்றிய ஐந்து மைதானப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து சில வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளார்கள். தற்போது இரு அணி வீரர்களும் அதன் நிர்வாகிகளும் தில்லி மைதானப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தில்லி, ஆமதாபாத் நகரங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த இரு நகரங்களிலும் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அடுத்த சில நாள்களில் ஐபிஎல் போட்டி குறித்த முக்கிய முடிவுகளை பிசிசிஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com