என்ன ஆச்சு ஷிகர் தவனுக்கு?

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஷிகர் தவனின் நீக்கம் தான்...
என்ன ஆச்சு ஷிகர் தவனுக்கு?

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஷிகர் தவனின் நீக்கம் தான்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 618 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார் ஷிகர் தவன். அதேபோல, 2016 முதல் 2021 வரை கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் ஒவ்வொரு முறையும் 450 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் ஷிகர் தவன். வேறு எந்த வீரரும் கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் 450 ரன்களை எடுத்ததில்லை. இந்த வருடமும் வேறு எந்த வீரராலும் தவனின் சாதனையைத் தொட முடியாது.  காரணம், 2016 முதல் 2020 வரையிலான 5 ஐபிஎல் போட்டிகளிலும் வேறு எந்த வீரரும் ஒவ்வொரு முறையும் 450 ரன்களை எடுத்ததில்லை. எனவே இந்தச் சாதனையில் ஷிகர் தவனை வேறு யாராலும் மிஞ்சமுடியாது.

இப்படி ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் ரன்கள் குவித்த ஷிகர் தவனுக்கு இந்திய டி20 அணியில் இடம் கொடுக்காவிட்டால் எப்படி? இந்தக் கேள்வியைத்தான் பலரும் எழுப்பினார்கள்.

மேலும் ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது சிறப்பாக விளையாடி 54 ரன்கள் சராசரி வைத்திருந்தார் ஷிகர் தவன். ஸ்டிரைக் ரேட் - 134. இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஷிகர் தவன் இடம்பெறாததால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷிகர் தவனின் பழைய ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. 42, 8, 24, 8 எனச் சுமாராகவே விளையாடி வருகிறார். ரன்கள் சராசரி - 20.5, ஸ்டிரைக் ரேட் - 114. எங்கே போனது அனைவரும் மெச்சிய ஆட்டம்?

மார்ச் மாதம் இந்தியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடினார் ஷிகர் தவன். அதில் 4 ரன்கள் மட்டும் எடுத்ததால் மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பிறகு அனுபவம் குறைந்த வீரர்களுடன் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியின் கேப்டனாக தவன் செயல்பட்டார். இருந்தும் தவனுக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, ராகுல், கோலி, இஷான் கிஷன் என தொடக்க வீரராகக் களமிறங்கப் பலரும் தயாராக இருப்பதால் ஷிகர் தவனை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை.

இதில் கிடைத்த ஏமாற்றமாகக்கூட இருக்கலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில் தவனால் பழையபடி உற்சாகமாக விளையாட முடியவில்லை. ஒருமுறை கூட அரை சதம் அடிக்காமல் சொதப்பி வருகிறார். இந்தப் புதிய ஷிகர் தவனை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். 6 ஐபிஎல் போட்டிகளில் குறைந்தபட்சம் 450 ரன்கள் எடுத்த ஒரே வீரரின் நிலைமை விரைவில் மாறும், பழையபடி அதிக ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com