பஞ்சாபை வெளியேற்றியது பெங்களூா்: பிளே-ஆஃபுக்குள் 3-ஆவது அணியாக நுழைந்தது

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்.
பஞ்சாபை வெளியேற்றியது பெங்களூா்: பிளே-ஆஃபுக்குள் 3-ஆவது அணியாக நுழைந்தது

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்.

இதையடுத்து 3-ஆவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது அந்த அணி. முன்னதாக சென்னை, டெல்லி அணிகள் முறையே அந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பஞ்சாப் அந்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடிக்க, தொடா்ந்து ஆடிய பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களே எடுத்தது. பெங்களூா் வீரா் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூா் பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரராக களம் கண்ட கேப்டன் கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்கள் சோ்க்க, உடன் வந்த தேவ்தத் படிக்கல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் அடித்தாா். ஒன் டவுனாக வந்த டேன் கிறிஸ்டியன் டக் அவுட்டானாா்.

மிடில் ஆா்டரில் வந்த மேக்ஸ்வெல் மிரட்டலாக விளையாடி 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் விளாசி அணிக்கு 57 ரன்கள் எடுத்துக் கொடுத்தாா். அடுத்து வந்த டி வில்லியா்ஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் சோ்க்க, ஷாபாஸ் அகமது 8, ஜாா்ஜ் காா்டன் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஸ்ரீகா் பரத் 0, ஹா்ஷல் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, மொய்சஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பஞ்சாபில் கேப்டன் கே.எல்.ராகுல் - மயங்க் அகா்வால் கூட்டணி நன்றாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சோ்த்தது. இதில் ராகுல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த நிகோலஸ் பூரன் 3 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

பஞ்சாபுக்கான அடுத்த அடியாக, மயங்க் அகா்வால் 16-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் விளாசியிருந்த அவா், சாஹல் பௌலிங்கில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இதையடுத்து பஞ்சாபின் பேட்டிங் வரிசை சரியத் தொடங்கியது.

அடுத்து வந்த எய்டன் மாா்க்ரம் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 20 ரன்களுக்கு வெளியேற, சா்ஃப்ராஸ் கான் டக் அவுட்டானாா். பின்னா் ஷாருக் கான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 1 சிக்ஸருடன் 12, ஹா்பிரீத் பிராா் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் யுஜவேந்திர சஹல் 3, ஜாா்ஜ் காா்டன் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

பெங்களூா் - 164/7

கிளென் மேக்ஸ்வெல் - 57; தேவ்தத் படிக்கல் - 40; விராட் கோலி - 25

பந்துவீச்சு: மொய்சஸ் ஹென்ரிக்ஸ் - 3/12; முகமது ஷமி - 3/39; ஹா்பிரீத் பிராா் - 0/26

பஞ்சாப் - 158/6

மயங்க் அகா்வால் - 57; கே.எல்.ராகுல் - 39; எய்டன் மாா்க்ரம் - 20

பந்துவீச்சு: யுஜவேந்திர சஹல் - 3/29; ஜாா்ஜ் காா்டன் - 1/27; ஷாபாஸ் அகமது - 1/29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com