கொல்கத்தாவைக் காப்பாற்றிய 'ஹீரோ' திரிபாதி: டெல்லியின் அசாத்திய முயற்சி வீண்!

குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 
வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்


குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

14-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

பவர் பிளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, டெல்லி பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தவிடாமல் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய வெங்கடேஷ் 38-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், சிறிது நேரத்திலேயே 55 ரன்களுக்கு ககிசோ ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்தாலும், தனது பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்தார் வெங்கடேஷ்.

அவர் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா வெற்றிக்கு 46 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.

முதல் விக்கெட்டுக்கு கில், வெங்கடேஷ் இணை 96 ரன்கள் சேர்த்தது. 

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸர் அடித்து, ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் எளிதான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட, ராணாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதைப் பயன்படுத்தத் தவறிய ராணா, அன்ரிச் நோர்க்கியா ஓவரில் கில் சிக்ஸர் அடித்தபோதும் தானும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

கடைசி 4 ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் வீசிய 17-வது ஓவரில் கில்லும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரபாடா, நோர்க்கியா அசத்தல்:

இதன்பிறகு ஆட்டத்தில் மீண்டும் விறுவிறுப்பு அதிகரித்தது. கில் ஆட்டமிழந்த பிறகு 8 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து தினேஷ் கார்த்திக் (0) விக்கெட்டை இழந்தது கொல்கத்தா. 

இதனால், கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது. 

19-வது ஓவரை வீசிய நோர்க்கியா 3 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசிப் பந்தில் இயான் மார்கன் (0) விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன.

6 பந்துகளில் 7 ரன்கள் தேவை; அஸ்வின் பந்துவீச்சு:

அஸ்வினுக்கு மட்டுமே ஓவர் இருந்தது. முதல் பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்தார். 2-வது பந்தில் ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷகிப் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை: 

அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற சுனில் நரைனும் பவுண்டரி எல்லை அருகே கேட்ச் ஆனார்.

ஆனால், ராகுல் திரிபாதி பொறுப்புடன் சிக்ஸர் அடித்து கொல்கத்தாவைக் காப்பாற்றினார். 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இதன்மூலம், டெல்லி கேபிடல்ஸின் அசாத்திய முயற்சி வீணானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com