ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கேவுக்குப் பெருமை சேர்க்கும் இளம் வீரர்

ஒவ்வொருமுறையும் நன்கு விளையாடும்போதும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. 
ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கேவுக்குப் பெருமை சேர்க்கும் இளம் வீரர்

சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார் கெய்க்வாட்.

நேற்று அவர் விளையாடிய ஐபிஎல் ஆட்டம், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையப் போகிறது. ஐபிஎல் 2021 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்வதால் பிசிசிஐயின் பெரிய தலைகள் பலரும் ஆட்டத்தை நேரில் காண வந்திருந்தார்கள். முதல் ஆட்டம், சென்னை - மும்பை மோதல் என்பதால் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்தார்கள். அனைவர் முன்பும் தன் முழுத் திறமையை வெளிப்படுத்தியதோடு அணியின் வெற்றிக்குப் பெரிய காரணமாகவும் இருந்துவிட்டார். இதைவிடவும் ஒரு வெளிச்சம் கிடைக்குமா?

சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது.

 துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தோ்வு செய்தது. சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே அடித்தது. சென்னை வீரா் ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக சென்னை தனது இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாற, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமாக விளையாடி அணியைக் கரை சேர்த்தார். 88 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். பேட்டிங்கில் அவருக்கு உதவிய பிராவோ, பந்துவீச்சிலும் சிறப்பாகப் பங்களித்தாா்.

இந்த வெற்றியினால் சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

சீனியர் சிட்டிசன்கள் என்று கேலி செய்யப்படும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் இளம் வீரராக உள்ள ருதுராஜ் கெயிக்வாட், குறுகிய காலத்தில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். இவர் ஒவ்வொருமுறையும் நன்கு விளையாடும்போதும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. 

2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை அதிக முறை வென்றவர் என்கிற பெருமை ருதுராஜ் கெய்க்வாடுக்குக் கிடைத்துள்ளது. 

2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது - சிஎஸ்கே வீரர்கள்

ருதுராஜ் கெய்க்வாட் - 5
இதர வீரர்கள் - 7

2020, 2021 ஐபிஎல் போட்டிகளில் ஆட்ட நாயன் விருது

5 - ருதுராஜ் கெய்க்வாட் (14 ஆட்டங்களில்)
5 - டி வில்லியர்ஸ் (22)
4 - கே.எல். ராகுல் (21)
4 - தவன் (25)

கடந்த இரு ஆண்டுகளில் சிஎஸ்கே விளையாடிய 22 ஆட்டங்களில் 14-ல் மட்டுமே புணேவைச் சேர்ந்த 24 வயது ருதுராஜ் விளையாடியுள்ளார். இருந்தும் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர் அவர்தான்.

ஐபிஎல் 2020: ருதுராஜ்

ஆட்டங்கள்: 6
ரன்கள்: 204
அரை சதங்கள்: 3
ஸ்டிரைக் ரேட்: 120.71

ஐபிஎல் 2021: ருதுராஜ்

ஆட்டங்கள்: 8
ரன்கள்: 284
அரை சதங்கள்: 3
ஸ்டிரைக் ரேட்: 135.23

நேற்றைய ஆட்டத்தில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்த பிறகு ராயுடுவும் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட 24/5 என்கிற நிலைமையில் இருந்தது. ஆனால் கடைசிவரை மனம் தளராமல் விளையாடி சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமான ஸ்கோரை எடுக்க உதவினார் ருதுராஜ். அவருடைய வழக்கமான ஆட்டம் என்பது ஆரம்ப ஓவர்களில் சற்று நிதானமாக விளையாடி, நடு மற்றும் கடைசி ஓவர்களில் பட்டையைக் கிளப்புவதுதான். நேற்றைய ஆட்டத்திலும் அவருடைய பாணியைக் கடைப்பிடித்துதான் 88 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது. கடைசிக்கட்டத்தில் பும்ராவின் பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் ருதுராஜ். 

கடந்த வருடம் மூன்று அரை சதங்களும் இந்த வருடம் இதுவரை இன்னொரு மூன்று அரை சதங்களும் அடித்து இந்திய கிரிக்கெட்டில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறார் ருதுராஜ். இலங்கையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர், இனிமேல் தொடந்து வாய்ப்பளிக்க வேண்டிய நெருக்கடியை பிசிசிஐக்குத் தந்துள்ளார். புதிய தலைமுறை வீரர்களில் ருதுராஜ் அபாரமான திறமைசாலியாக கிரிக்கெட் நிபுணர்களால் கவனிக்கப்படுகிறார். நேற்றைய ஆட்டத்தில் நெருக்கடியான சூழலிலும் அணியைக் கரை சேர்த்தது அவருடைய வலுவான மனநிலைக்கு உதாரணமாக அமைந்துள்ளது. எந்த அணியும் இப்படியொரு பொக்கிஷத்தை வீணடிக்காது. விரைவில் இந்திய அணியின் உடைகளில் ருதுராஜை அடிக்கடி காணப் போகிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com