பாண்டியா விளையாடாமல் இருப்பதற்கு பிசிசிஐ காரணமா?: மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதில்

பாண்டியா விளையாடாமல் இருப்பதற்கு பிசிசிஐ...
பாண்டியா விளையாடாமல் இருப்பதற்கு பிசிசிஐ காரணமா?: மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதில்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஹார்திக் பாண்டியா விரைவில் முழு உடற்தகுதியை அடைவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 15.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது.

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. மும்பை அணி 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. அவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியதாவது:

ஹார்திக் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் பயிற்சி செய்தார். விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்டார். எங்கள் அணிக்கும் இந்திய அணிக்கும் தேவைப்படுவது போல அவருடைய நிலைமையைக் கவனித்து வருகிறோம். ஐபிஎல் போட்டியை மட்டுமல்ல, உலகக் கோப்பைப் போட்டியையும் வெல்லும் விதத்தில் வீரர்கள் தயாராக வேண்டும் என மும்பை அணி எண்ணுகிறது. 

அடுத்த ஆட்டத்தில் பாண்டியா விளையாடுவார் என நம்புகிறேன். பாண்டியா விளையாடாமல் இருப்பதற்கு பிசிசிஐ காரணமல்ல. அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் அவரை உடனடியாக விளையாட வைக்கவே விரும்புகிறோம். எந்தவொரு வீரரும் விளையாட ஆர்வமாகவே இருப்பார். ஐபிஎல் போட்டியை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கும்போது அவசர அவசரமாக பாண்டியாவை விளையாட வைத்து, காயம் உண்டாக்கி, ஐபிஎல் போட்டியை அவர் தவற விட விரும்பவில்லை. விரைவில் விளையாடுவார். ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். எங்கள் அணி பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்று போட்டியை வெல்ல உதவுவார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com