கோலி, மேக்ஸ்வெல் அரைசதம்: மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
கோலி, மேக்ஸ்வெல் அரைசதம்: மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் வழக்கம்போல் களமிறங்கினர். டிரென்ட் போல்ட் வீசிய 2-வது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. 

ஜாஸ்பிரித் பும்ரா 2-வது ஓவரில் அற்புதமாகப் பந்துவீசி படிக்கலைத் திணறடித்து 4-வது பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கோலியுடன் இணைந்து ஸ்ரீகர் பரத்தும் ரன் குவிக்கும் முனைப்பை வெளிப்படுத்தினார். இதனால், பவர் பிளேவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது.

நடுஓவர்களில் சுழற்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த இந்த இணை முயற்சித்தது. கோலி 37 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் சஹார் ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹார்திக் பாண்டியா தவறவிட்டார். அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்த பரத் (32 ரன்கள்) அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டி பிறகு படிப்படியாக ரன் ரேட்டை மீண்டும் முந்தைய நிலைக்கே உயர்த்தியது.

போல்ட் வீசிய 15-வது ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயம் அரைசதம் அடித்த கோலிக்கும் மேக்ஸ்வெல்லுக்கும் ஏற்பட்டது.

இந்த முனைப்பில் ஆட முயற்சித்து கோலி 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் பும்ரா ஓவரில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரிகள், 1 சிக்ஸர் பறக்கவிட்டு அரைசதத்தை எட்டினார்.

இதனால், அதிரடி பினிஷிங் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

பும்ரா இரட்டை அடி:

ஆனால், பும்ரா மாற்று திட்டத்தை வைத்திருந்தார். அவர் 19-வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தாலும், 3-வது பந்தில் அவரது விக்கெட்டைக் கைப்பற்றினார். மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

அடுத்த பந்திலேயே டி வில்லியர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தி பும்ரா மும்பைக்குப் பெரிய திருப்புமுனையை உண்டாக்கினார்.

கடைசி ஓவரில் போல்ட் 3 ரன்களை மட்டும் கொடுத்து ஷபாஸ் அகமது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், போல்ட், ஆடம் மில்ன் மற்றும் சஹார் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com