சென்னைக்கு முதல் வெற்றி: பெங்களூரு தோல்வி

சென்னைக்கு முதல் வெற்றி: பெங்களூரு தோல்வி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.

217 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 3-வது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகேஷ் தீக்ஷனா தனது முதல் ஓவரிலேயே பாப் டு பிளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி விக்கெட்டை முகேஷ் சௌதரி வீழ்த்த பவர் பிளேவின் கடைசி பந்தில் அனுஜ் ராவத்தை மீண்டும் தீக்ஷனா வீழ்த்தினார்.

பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது.

இதனிடையே, விக்கெட்டுகளை பற்றி கவலைகொள்ளாமல் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காட்டி மிரட்டினார். அவரையும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா போல்டாக்கினார்.

சென்னைக்குப் பெரு நிம்ம்தி என நினைக்க, சூர்யாஷ் பிரபுதேசாய் மற்றும் ஷபாஸ் அகமது பவுண்டரிகள் அடித்து சென்னையை நெருக்கடிக்குள்ளாக்கியது.

இதனால், 13-வது ஓவரில் மீண்டும் தீக்ஷனா அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரபுதேசாயை (18 பந்துகள் 34 ரன்கள்) போல்டாக்கினார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தது. தனது அடுத்த ஓவரில் ஷபாஸ் அகமது (41 ரன்கள் 27 பந்துகள்) விக்கெட்டையும் தீக்ஷனா வீழ்த்தினார்.

பிறகு வனிந்து ஹசரங்கா மற்றும் ஆகாஷ் தீப்பை ஒரே ஓவரில் ஜடேஜா வீழ்த்த அந்த அணி 146 ரன்களுக்குள் 8 விக்கெட்டை இழந்தது.

ஆனால், தினேஷ் கார்த்திக் நம்பிக்கை காட்டி வந்தார். குறிப்பாக முகேஷ் சௌதரி வீசிய 17-வது ஓவரில் 23 ரன்கள் விளாச கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால், 18-வது ஓவரை டுவைன் பிராவோ, கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்தார். தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸால் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது சிராஜ் 11 பந்துகளில் 14 ரன்களும், ஜோஷ் ஹேசில்வுட் 7 பந்துகளில் 7 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை தரப்பில் மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌதரி மற்றும் டுவைன் பிராவோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com