ஐபிஎல் போட்டியில் சாதிப்பாரா தமிழக வீரர் ஷாருக் கான்?

உள்ளுர் போட்டிகளில் பெரிதாகச் சாதித்ததால் தான் ரூ. 9 கோடி வரை ஏலத்தில் செல்ல முடிந்தது.
ஐபிஎல் போட்டியில் சாதிப்பாரா தமிழக வீரர் ஷாருக் கான்?

ஐபிஎல் போட்டியில் முத்திரை பதித்து இந்திய அணியில் இடம்பெற்று அப்படியே உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே இந்திய வீரர்கள் பலரின் எதிர்பார்ப்பாகவும் கனவாகவும் உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20, ஒருநாள், ரஞ்சி கோப்பை என அனைத்திலும் சிறப்பாக விளையாடியதால் உண்டான ஆர்வம் இது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. பிறகு கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அந்த ஆட்டத்தில் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். 

13 வயது முதல் சென்னை லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் ஷாருக் கான். 2012-ல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றார். 6 அடி 4 அங்குலம் கொண்ட ஷாருக் கான் 2014-ல் உலகக் கோப்பைக்கான யு-19 இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் கூச் பெஹர் கோப்பை யு-19 போட்டியில் 624 ரன்களும் 18 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார். ஆனால் அதே வருடம் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்கான தமிழக அணியில் இடம்பிடித்தார். பத்ரிநாத், பாலாஜி ஆகியோருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். டிஎன்பிஎல் போட்டி ஷாருக் கானுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணிக்குத் தேர்வான ஷாருக் கானுக்கு ஆரம்பத்தில் நல்லவிதமாக அமையவில்லை. 5 இன்னிங்ஸில் 70 ரன்கள் தான் எடுத்தார். இதனால் தமிழ்நாடு அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் 2018 போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடி 325 ரன்கள் எடுத்துக் கவனம் ஈர்த்தார். இதனால் தமிழக அணியில் மீண்டும் இடம்பிடித்தார். அதே அவருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியில் அறிமுகம் ஆனார். நடிகர் ஷாருக் கானை மனத்தில் கொண்டு இவருக்கு ஷாருக் கான் எனப் பெற்றோர் பெயர் வைத்துள்ளார்கள். இதன் காரணமாக மைதானங்களில் எதிரணி வீரர்கள் என்னைக் கிண்டல் செய்து வெறுப்பேற்ற முயல்வார்கள் என்கிறார் ஷாருக் கான்.

கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 11 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 134.21. 10 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். எனினும் 11 பேரில் ஒருவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஞ்சி கோப்பைப் போட்டியில் தில்லி அணிக்கு எதிராக 6 ரன்களில் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார். 89 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார் ஷாருக் கான். இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷாருக் கான். 148 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகள் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அடுத்த ஆட்டத்தில் ஒரு அரை சதம் எடுத்தார். 

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் ஷாருக் கான். பிறகு இந்திய அணிக்குத் தேர்வானதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தினார். கடைசியில் ஏலத்தில் பஞ்சாப் அணி ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. தேசிய அணியில் இடம்பெறாத வீரர்களில் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களில் ஷாருக் கானுக்கு 2-ம் இடம் கிடைத்தது. (அவேஷ் கான் ரூ. 10 கோடிக்குத் தேர்வானார்.)

உள்ளுர் போட்டிகளில் பெரிதாகச் சாதித்ததால் தான் ரூ. 9 கோடி வரை ஏலத்தில் செல்ல முடிந்தது. கடந்த வருடம் பஞ்சாப் அணி ஷாருக் கானின் திறமையை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த வருடம் இன்னும் அதிகமாகத் தன் திறமையை நிரூபித்ததால் லீக் சுற்றில் 14 ஆட்டங்களிலும் ஷாருக் கான் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். ஷாருக் கானுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியில் விளையாடி உலகக் கோப்பையில் இடம்பெற முயலும் ஷாருக் கானின் கனவு நிறைவேற வேண்டும். அதற்கான முதல் படியாக ஐபிஎல்-லில் சிக்ஸர் திருவிழாவை அவர் ஏற்படுத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com