சென்னை வெற்றியைப் பறித்த லீவிஸ், பதோனி: லக்னௌவுக்கு முதல் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 
படம்: ஐபிஎல் | ட்விட்டர்
படம்: ஐபிஎல் | ட்விட்டர்


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

211 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னௌவுக்கு கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் படிப்படியாக அதிரடிக்கு மாறி சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். குயின்டன் டி காக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மொயீன் அலி தவறவிட்டதால், பவர் பிளே முடிவில் லக்னௌ அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி என சுழற்பந்துவீச்சை ராகுலும், டி காக்கும் விளாச 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு டுவைன் பிரிடோரியஸ் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் ஓவரிலேயே ராகுல் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஓவரில் மணீஷ் பாண்டே விக்கெட்டை வீழ்த்தினார். 

விக்கெட்டுகள் விழுந்ததால் அரைசதம் கடந்த டி காக் சற்று பவுண்டரி அடிப்பதில் சிரமம் கண்டார். ஆனால், எவின் லீவிஸ் வந்த வேகத்தில் மிரட்டத் தொடங்கி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். 

சென்னை தரப்பில் பிரிடோரியஸ் மட்டும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கொடுக்காமல் கட்டுப்பாடாக பந்துவீசினார். டி காக் (61) விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

கடைசி 3 ஓவரில் லக்னௌ வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டன. டுவைன் பிராவோ வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை தீபக் ஹூடா சிக்ஸருக்கு பறக்கவிட்டாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமும் இழந்தார். இதன்பிறகு, பிராவோ சூப்பராக வீசியதால் மேற்கொண்டு பவுண்டரிகள் போகவில்லை.

கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் தேவை:

19-வது ஓவரை ஷிவம் துபே வீசினார். ஆயுஷ் பதோனி முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டதால், நெருக்கடி துபே பக்கம் திரும்பியது. அடுத்த 2 பந்துகளும் வைடாக போனதால், துபேவுக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி 3 பந்துகளில் 2 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் பறக்கவிட்ட லீவிஸ் 22-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதேசமயம், கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையையும் உருவாக்கினார்.

துபே வீசிய 19-வது ஓவரில் 25 ரன்கள் குவித்தது லக்னௌ.

கடைசி ஓவரை முகேஷ் சௌதரி வீசினார். முதல் பந்து வைடாக போனதால், 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இரண்டாவது பந்தும் வைடாக போனதால் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. இதன்பிறகு, முதல் பந்தை பதோனி சிக்ஸருக்கு விளாச ஆட்டம் சமநிலை அடைந்தது. 3-வது பந்தை பதோனி தூக்கி அடித்து ரன் எடுக்க லக்னௌ அணி 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லீவிஸ் 23 பந்துகளில் 55 ரன்களும், ஆயுஷ் பதோனி 9 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com