இறுதி(யில்) இடம் யாருக்கு?: ராஜஸ்தான் (vs) பெங்களூர்

ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
இறுதி(யில்) இடம் யாருக்கு?: ராஜஸ்தான் (vs) பெங்களூர்


அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்தும். 

ஏற்கெனவே குவாலிஃபயர் 1-இல் குஜராத்துடன் மோதி தோல்வி கண்டு இந்த ஆட்டத்துக்கு வந்திருக்கிறது ராஜஸ்தான். முதல் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில் இந்த வாய்ப்பை தவறவிடாமல் கோப்பையை நோக்கி முன்னேறும் முனைப்பில் இருக்கிறது அந்த அணி. 

மறுபுறம், கடைசி நேரத்தில் பிளே ஆஃபில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்ட பெங்களூர், எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னெளவை வெளியேற்றி அதே உத்வேகத்துடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் முன்னேறி வருகிறது. 

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோரே பிரதானமாக இருக்கின்றனர். என்றாலும், கடந்த ஆட்டத்தில் அவர்களுமே சோபிக்காமல் போனது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சீசனில் அதிக ரன்கள் ஸ்கோர் செய்ததற்கான ஆரஞ்சு கேப் வைத்திருக்கும் பட்லர், அதற்குத் தகுந்த வீரராக இந்த ஆட்டத்தில் மீண்டும் ஸ்கோர் செய்ய முயற்சிப்பார். 

கேப்டன் சாம்சன் உள்ளிட்டோர் துணை நிற்கும் பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டும். அஸ்வின், யுஜவேந்திர சஹல் உள்ளிட்ட அந்த அணியின் பெளலர்களும் பெங்களூர் பேட்டர்களுக்கு சவால் அளிக்க வேண்டியது முக்கியமாகும். கடந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணாவின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் விளாசித் தள்ளியது நிச்சயம் அணி வீரர்களுக்கு நினைவில் இருக்கும். 

பெங்களூர் அணியைப் பொருத்தவரை, போட்டியின் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க அந்த அணி தகுந்த உத்வேகத்துடன் முன்னேறுவதாகத் தெரிகிறது. எலிமினேட்டர் ஆட்டத்தில் அட்டகாசம் காட்டிய ரஜத் பட்டிதார் இந்த ஆட்டத்திலும் முக்கியத்துவம் பெறுகிறார். மறுபுறம், கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் கடந்த ஆட்டத்தில் எடுக்கத் தவறிய ரன்களை, இந்த ஆட்டத்தில் எட்டுவதற்கு முயற்சிப்பார்கள். 

அணியின் பெளலர்களில் ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக பெளலிங் செய்து முக்கியமான தருணத்தில் விக்கெட் சரிப்பது பலமாக இருக்கிறது. டெத் ஓவர்களில் ஜோஷ் ஹேஸில்வுட் உறுதியாகச் செயல்படுகிறார். முகமது சிராஜும் முனைப்பு காட்டும் நிலையில், ராஜஸ்தான் பேட்டிங்கை இவர்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com