பிறந்த நாள்: ஆஸ்திரேலியாவில் சாதித்த நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்!

நடராஜனின் வெற்றி ஏதோ நம் வீட்டில் உள்ள ஒருவர் சாதித்தது போன்ற ஓர் உணர்வைத் தருகிறது. 
பிறந்த நாள்: ஆஸ்திரேலியாவில் சாதித்த நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்!


ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார் நம்ம நடராஜன். முதல் ஆட்டத்தில் வழக்கம்போல யார்க்கர் பந்துகளை வீசித் தள்ளினார். இன்று அவருடைய பிறந்த நாள். ஒரு சிறிய கிராமத்திலிருந்து கிளம்பி சர்வதேச அரங்கில் சாதித்து பலருக்கும் பெரிய ஊக்கமாக உள்ளார் நடராஜன். இவருடைய வெற்றி ஏதோ நம் வீட்டில் உள்ள ஒருவர் சாதித்தது போன்ற ஓர் உணர்வைத் தருகிறது. 

நடராஜனுக்குத் திருப்புமுனையாக அமைந்த ஐபிஎல் 2020 போட்டியில் அவர் விளையாடியதே முதலில் ஆச்சர்யம்தான். காரணம், அதற்கு முன்பு இரு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாட நடராஜனுக்கு சன்ரைசர்ஸ் அணி வாய்ப்பு வழங்கவில்லை. புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல், சந்தீப் சர்மா என இவர்களையே எல்லா ஆட்டங்களிலும் தேர்வு செய்ததால் நடராஜனின் பங்களிப்பு அவசியமில்லாமல் இருந்தது. 

2019-ல் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் தமிழக அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் நடராஜன். எகானமி - 5.84. இது நடராஜன் மீது புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2020 போட்டியின் ஆரம்பத்திலேயே வாய்ப்பு தந்து பார்த்தது சன்ரைசர்ஸ் அணி.

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார் நடராஜன். ஐபிஎல் போட்டி முழுக்க விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது.

அதற்கு முன்பு, 2017-ல் பஞ்சாப் அணிக்கு ரூ. 3 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யத்தை உண்டாக்கினார் நடராஜன். அந்தத் தருணத்தை அடைய அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். தந்தை தறி நெசவு நெய்து வந்தார். அம்மா, சாலையோரத்தில் சிக்கன் கடை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். மூன்று தங்கைகள், ஒரு தம்பி. நடராஜன் மூத்தவர். ஐந்து பேரும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். வறுமையான பின்னணி. அரசுப் பள்ளியாக இருந்தாலும் நோட்டுக்களை வாங்கக் கூட முடியாத நிலைமை. ஒரே அறை உள்ள மண் தரை வீட்டில் எட்டு பேர் வாழ்ந்துள்ளோம். பலமுறை சாலைகளில் படுத்துத் தூங்கியிருக்கிறேன் என்கிறார் நடராஜன். எல்லோரையும் போல நடராஜனுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்திருக்கிறது. ஆனால் தெருவில் மட்டும் விளையாடாமல் நண்பர்களுடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் பள்ளியை முடித்தவுடன் கிரிக்கெட் மைதானத்திலேயே எந்நேரமும் இருந்திருக்கிறார். 

பெரிய குடும்பம். மூத்தவனான உன்னை நம்பிதான் குடும்பம் இருக்கு. நீ இன்னும் கிரிக்கெட் விளையாடுறியே என ஊர்க்காரர்களும் வீட்டில் அப்பா அம்மாவும் கூறி கிரிக்கெட் ஆர்வத்தைக் கேள்வி எழுப்பியபோது உதவ முன்வந்துள்ளார் ஜெயபிரகாஷ். ஊரில் ஜெயபிரகாஷின் கிரிக்கெட் அணியில் டென்னிஸ் பந்து ஆட்டங்களில் விளையாடியுள்ளார் நடராஜன். அவருடைய அணி போட்டிகளில் நன்கு விளையாடியதால் அதில் சேரவேண்டும் என்று முதலில் ஆசைப்பட்டு அதேபோல தேர்வாகி, பிறகு ஜெயபிரகாஷையும் தன் திறமையால் கவர்ந்துள்ளார் நடராஜன். நல்ல வேகத்தில் பந்து வீசுகிறாய் என்று நடராஜனிடம் முதலில் சொன்னவர் ஜெயபிரகாஷ் தான். 

என் வீட்டுக்கு வந்து, பையனை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ஜே.பி. அண்ணா. இதனால் தான் ஐபிஎல் உடையில் ஜேபி நட்டு என்று என் பெயருடன் அவருடைய பெயரையும் இணைத்துள்ளேன் என்று அப்போது பேட்டியளித்தார் நடராஜன். கையிலும் ஜேபி என பச்சை குத்தியிருக்கிறார்.

நடராஜனைக் கல்லூரியில் படிக்க வைத்தது மட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆட்டங்களுக்காக சென்னைக்கு அழைத்து வந்து உடைகள் வாங்கித் தருவது என பலவழிகளிலும் உதவியுள்ளார் ஜெயபிரகாஷ். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் என்னை முழுமையாகப் பார்த்துக்கொண்டார் ஜெயபிரகாஷ் அண்ணா. ஒருமுறை ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தபோது கிடைத்த ஓர் இருக்கையை எனக்களித்து முழுப் பயணத்திலும் நின்றுகொண்டு வந்தார் என ஜெயபிரகாஷ் பற்றி எப்போது பேசினாலும் உணர்ச்சிவசப்படுவார் நடராஜன். இந்தியாவில் நடராஜன்கள் உருவாக ஜெயபிரகாஷ்கள் தேவை. 

10 வயதிலிருந்து டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியுள்ள நடராஜன், 20 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்தில் விளையாட ஆரம்பித்துள்ளார். 

சேலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடும்போதுதான் யார்க்கர் பந்துவீச்சை நன்குக் கற்றுக்கொண்டார். டென்னிஸ் பந்து பிட்ச் ஆனவுடன் வேகத்தை இழந்துவிடும். இதனால் வீசிய வேகத்தில் பேட்ஸ்மேனிடம் பந்து செல்லவேண்டும் என்றால் அதற்கு யார்க்கர் பந்தை வீசுவதுதான் சரி என உணர்ந்து அதை முயற்சி எடுத்துக் கற்றுக்கொண்டார் நடராஜன். 

ஜெயபிரகாஷ் மூலம் சென்னையில் 4-வது டிவிஷன் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது. அங்கிருந்துதான் நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கை முறையாகத் தொடங்கியது. 

வேகப்பந்து வீச்சாளருக்கு நல்ல ஷூ முக்கியம். இரு வருடங்கள் ஷூ இல்லாமல் வெறுங்காலில் பயிற்சிகள் மேற்கொண்டதாகக் கூறுகிறார் நடராஜன். இவர் விளையாடும் அணிகள் நல்ல ஷூக்களை வாங்கித் தந்தால் அதை ஒரு வருடத்துக்குப் பத்திரமாகப் பார்த்துகொள்வாராம். சென்னைக்கு வந்து விளையாட ஆரம்பித்தவுடன் தமிழ்நாடு கிரிக்கெட்டின் வரலாறு, அதன் மகிமையை அறிந்தார். இதனால் தமிழக ரஞ்சி அணியில் விளையாட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்கள் யு-19, யு-22 கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்த பிறகுதான் ரஞ்சி அணியில் நுழைய முடியும். அந்தளவுக்கு அது ஒரு இரும்புக்கோட்டை. ஆனால் இந்த அணிகளில் விளையாடாமல் நேரடியாக ரஞ்சி அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. 

2015-ல் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடினார். முதல் ஆட்டத்திலேயே விதிமுறைகளை மீறி பந்துவீசுகிறார் என்று புகார் எழுந்தது. இதனால் பந்துவீசும் முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவருடம் போராடினார். ரஞ்சி அணி வரைக்கும் வந்தும் முடங்கிப் போய்விட்டேனே என கவலைப்பட்டார். பந்துவீசும் முறையை மாற்றுவதற்கே ஒரு வருடம் ஆனது. பயிற்சியாளர்கள் பலர் ஊக்கப்படுத்தியதால் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. பந்துவீசும் முறையை மாற்றிய பிறகு டிஎன்பிஎல் டி20 போட்டியில் விளையாடினார். ஒரு வருடம் விளையாடாமல் இருந்ததால் வெறியுடன் அப்போட்டியில் பங்கேற்றார். நடராஜன் வெள்ளைப் பந்தில் விளையாடிய முதல் போட்டி அதுதான்.

டிஎன்பிஎல் 2016 போட்டியில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்தார். சூப்பர் ஓவர் ஒன்றில் தொடர்ச்சியாக ஆறு யார்க்களை வீசினார். அபினவ் முகுந்த் களத்தில் இருந்தும் நடராஜனின் துல்லியமான யார்க்கர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. அதுதான் நடராஜனுக்குப் பெரிய அடையாளமாக மாறியது. அந்தத் தருணத்திலிருந்து வேறு வாழ்க்கை அமைந்தது. டிஎன்பிஎல் போட்டியும் அந்த சூப்பர் ஓவர் யார்க்கர்களும் அமையாமல் போயிருந்தால் நடராஜனின் வாழ்க்கை என்னவாகியிருக்கும்?

டிஎன்பிஎல் போட்டியில் அசத்தியதால் 2017 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு நடராஜனைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. ஆனாலும் ஆறு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.  2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். எகானமி - 9.07. இதனால் நடராஜன் வேண்டாம் என பஞ்சாப் அணி அவரை விடுவித்தது.

இதன்பிறகு காயம் காரணமாக ரஞ்சி போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2018 ஐபிஎல் ஏலத்தில் நடராஜனைத் தேர்வு செய்தது, ரூ. 40 லட்சத்துக்கு. பலனில்லை. 2018, 2019 ஐபிஎல் போட்டிகளில் நடராஜனால் ஒரு ஆட்டத்திலும் விளையாட முடியாமல் போனது. அந்தளவுக்குப் பலமான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தது சன்ரைசர்ஸ் அணி.

ஐபிஎல் 2020 போட்டியில் நடராஜனின் திறமையை அறிந்து ஆரம்பத்திலேயே வாய்ப்பளித்தது சன்ரைசர்ஸ் அணி. இதற்காகக் காத்திருந்த நடராஜன், தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தார். பேட்ஸ்மேன்களைப் போட்டி முழுக்க திணறடிக்கப் போகிறார் என்பதை யாருமே முதலில் எண்ணவில்லை. 

முதல் ஆட்டத்தில் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், நடராஜனுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். டி20 ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களின் பலமாக இருக்கும் யார்க்கர்களைத் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார். யார்க்கர் பந்துவீச்சு தானே ஐபிஎல் போட்டியில் முதலில் வாய்ப்பளித்தது, அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றெண்ணி, ஒரு முடிவுடன் பந்துவீசத் தொடங்கினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் யார்க்கருக்கென்றே புகழ்பெற்ற பும்ரா உள்ளிட்ட பல பிரபல பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் நடராஜன் அளவுக்கு வேறு யாராலும் யார்க்கரில் நிபுணத்துவம் பெற்று அதிகமுறை வீச முடியவில்லை. இதனால் நடராஜன் விளையாடுகிற ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் வீசுகிற யார்க்கர்களுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எனப் பலரும் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்து அவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள்.

ஐபிஎல் 2020 போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒன்று, பிளேஆஃப்பில் வீழ்த்திய டி வில்லியர்ஸின் விக்கெட்.  இந்திய அணியில் விளையாடாத ஒரு வீரர், இந்த அளவுக்குத் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதை இதுவரை பார்த்ததில்லை என நடராஜனைப் பாராட்டி  ட்வீட் வெளியிட்டார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.  அதுதவிர அந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 8.02. 

கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் நடராஜனுக்கு அப்போது சந்தோஷமான காலக்கட்டம். பள்ளியில் தன்னுடன் படித்த பவித்ராவை 2018 ஜூன் மாதம் திருமணம் செய்தார். ஐபிஎல் 2020 போட்டியின்போது பெண் குழந்தைக்குத் தந்தையானார் நடராஜன். குழந்தை பிறந்த பிறகு விளையாடிய ஆட்டத்தில் டிவில்லியர்ஸை யார்க்கர் பந்து மூலம் போல்ட் செய்தார் நடராஜன். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு நேராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் நடராஜன். இதனால் தனது குழந்தையை அவரால் உடனடியாகப் பார்க்க முடியாமல் போனது. 

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் கபில் தேவ், நடராஜனைப் பற்றியும் யார்க்கர் பந்துவீச்சு பற்றியும் கூறியதாவது: ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான். அந்த இளம் வீரருக்குப் பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர் தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல, கடந்த 100 வருடங்களாகவே. யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளைச் சரியாக அவர் பின்பற்றினார் என்றார்.

ஐபிஎல் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்ட பிறகு கலீல் அஹமத்துக்கு வாய்ப்பளிப்பதை விடவும் நடராஜனுக்கே முன்னுரிமை அளித்தோம். பயிற்சியின்போது அற்புதமாகப் பந்துவீசி நம்பிக்கை ஏற்படுத்தினார். யார்க்கர் பந்தை விடவும் வேறு விதமாகவும் அவரால் சிறப்பாகப் பந்துவீச முடியும். ஆனால் அதை ஐபிஎல் போட்டியில் அவர் பயன்படுத்தவில்லை. கூர்மையான பவுன்சர், ஸ்லோ பால், ஆஃப் கட்டர் என பலவகைப் பந்துகளை அவரால் வீச முடியும். மிகவும் கடினம் என எண்ணக்கூடிய யார்க்கர் பந்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வீசுவார் என்றார் சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் குழுவில் இருந்த முன்னாள் வீரர் லக்‌ஷ்மண். நடராஜன் என்றால் யார்க்கர் பந்துவீச்சு தான் என்று பலரும் எண்ணியபோது நடராஜனிடம் மற்ற பந்துவீச்சுத் திறமைகளும் உண்டு என அவர் நம்பிக்கையூட்டினார்.

ஆஸ்திரேலியாவில் நடராஜனுக்கு நிகழ்ந்தது எல்லாமே கனவு மாறி தான் இருந்தது. கற்பனையில் கூட யாராலும் யோசித்திருக்க முடியாது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள். 

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார். 

கான்பெராவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி, பவர்பிளேயில் விக்கெட் எடுக்காத குறையைத் தீர்த்தார். ஆஸி. வீரர் லபுஷேன், நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.

இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார் நடராஜன். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஒரு ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும் மூன்று டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்ற பாண்டியா, நடராஜன் இவ்விருதுக்குத் தகுதியானவர் என்று கூறி பாராட்டினார். அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பெற்றார் நடராஜன். நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. 

இந்திய அணியில் 29 வயது ஆகிவிட்ட ஒரு வீரரைப் புதிதாகச் சேர்க்க மிகவும் யோசிப்பார்கள். 29 வயதில் இந்தியாவுக்கு வெகுசில வேகப்பந்து வீச்சாளர்களே தேர்வாகியுள்ளார்கள். 1958-ல் குலாம் கார்ட், டெஸ்டுக்குத் தேர்வானார். 1994-ல் புபிந்தர் சிங் சீனியர் ஒருநாள் ஆட்டத்துக்கும் 2014-ல் பங்கஜ் சிங்கும் 2015-ல் எஸ். அரவிந்தும் 29 வயதில் தேர்வானார்கள். அதற்குப் பிறகு தேர்வானவர் 29 வயது நடராஜன். 

மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். இதனால் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த நடராஜன், இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார். சிட்னி டெஸ்டில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவர்கள் இடம்பெறவில்லை. இதனால் 4-வது டெஸ்டில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அவருடன் இணைந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை ஆஸ்திரேலியாவில் பெற்றார் நடராஜன். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற 4-வது டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது. பிரிஸ்பேனில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி 4-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியில் நடராஜனின் பங்கும் சிறிய அளவில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

ஆஸ்திரேலியாவில் சாதித்த நடராஜனுக்கு கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அப்போது சமூகவலைத்தளங்கள் முழுக்க நடராஜனைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. நடராஜனின் இந்தச் சாதனையைத் தங்கள் வீட்டுப் பிள்ளை ஒருவர் சாதித்ததாகவே தமிழர்கள் எண்ணினார்கள். 

எளிமையான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்த நடராஜன் முதலில் ஆசைப்பட்டது, ஜெயபிரகாஷ் அண்ணனின் டென்னிஸ் பந்து அணிக்குத் தேர்வாக வேண்டும் என்பதுதான். அடுத்ததாக தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று கனவு கொண்டார். ஆனால் அவருடைய திறமையும் உழைப்பும் பொறுமையும் ஆஸ்திரேலியா வரைக்கும் கொண்டு சென்றது. திறமைசாலிக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமான நடராஜன் பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்குத் திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். சேலம் மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் இதரப் பகுதிகள், கேரளாவிலிருந்தும் நடராஜனைப் பார்க ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். 

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு மொட்டையடித்துக் கொண்டார் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானது, மகள் பிறந்தது என ஏராளமான நல்ல தருணங்களைப் பெற்றதால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். 

ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கும் நடராஜன் தேர்வானார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தின் கடைசி ஓவரைச் சிறப்பாக வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் நடராஜன். கடைசி ஓவரில் சாம் கரண் விளையாடினார். இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டபோது தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அந்த ஓவரில் சாம் கரண் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது: யார்க்கர் பந்துவீச்சு என்பது அழிந்து வருகிறது. உலகம் முழுக்க நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் யார்க்கர் பந்துவீச்சைப் பந்துவீச்சாளர்கள் சுலபமாக வீசுவார்கள் என நினைப்பீர்கள். இப்போதும் அதைத் துல்லியமாக வீசுவது கடினமானது. சரியாக வீசாவிட்டால் பந்து சிக்ஸருக்குப் பறக்கும். பதற்றமான தருணத்தில் சிறப்பாகப் பந்துவீசினார் நடராஜன். சாம் கரண் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசப்பட்டது. பில்லியன் பார்வையாளர்கள் பார்க்கும் ஆட்டத்தில் நடராஜனின் இதயத் துடிப்பு எப்படியிருந்திருக்கும்! துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய நடராஜனுக்குப் பாராட்டுகள் என்றார். 

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய புதிய வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், சிராஜ், சைனி, ஷுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் அவர்களுக்குப் பரிசாக அளிக்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா கூறினார். இதையடுத்து மஹிந்திரா கார் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அறிமுக டெஸ்டில் உடுத்திய சீருடையை  ஆனந்த் மஹிந்திராவுக்கு வழங்குவதாக நடராஜன் அறிவித்தார். மேலும் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு வழங்கினார் நடராஜன். இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது விசாலமான மனதை வெளிப்படுத்த அவர் தவறியதில்லை.

*

2021-ம் வருடம் நடராஜனுக்குச் சரியாக அமையவில்லை.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார். நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது.

ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு ஏப்ரல் மாத இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதன் காரணமாகவும் இந்திய அணியில் ஏற்கெனவே பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் எனப் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாலும் நடராஜனால் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற முடியாமல் போனது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தயாராக இருந்தார் நடராஜன். ஆனால் அங்கு சென்றபிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியிலும் அவரால் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியை வென்ற தமிழக அணியில் நடராஜனும் இடம்பெற்றார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விஜய் ஹசாரே போட்டியில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் 5 மாதங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டு பிறகு சென்னையிலும் சின்னப்பம்பட்டியிலும் பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். கர்நாடக முன்னாள் வீரர் ஸ்ரீநாத் அரவிந்தின் மேற்பார்வையில் பயிற்சிகள் மேற்கொண்டு தனது பந்துவீசும் முறையும் லேசாக மாற்றிக்கொண்டார். புதிய ஆக்‌ஷன் முறையில் தன்னால் இன்னும் அதிகமாகப் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்கிறார் நடராஜன். இந்திய அணிக்காக இதுவரை 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார்.


*

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் நடராஜனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி. பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கடுமையாகப் போராடியும் இறுதியில் சன்ரைசர்ஸே நடராஜனைத் தேர்வு செய்தது. முதலில் ரூ. 3 கோடி, அடுத்தது ரூ. 40 லட்சம், இப்போது ரூ. 4 கோடி என ஐபிஎல் ஏலத்தில் விதவிதமான தொகைக்கு நடராஜன் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் காசை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் சேலம் பகுதியில் மேலும் பல நடராஜன்களை, பல கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே நடராஜனின் லட்சியம். 2017-ல் சேலத்தில் கிரிக்கெட் அகாதெமியை ஆரம்பித்தார். டர்ஃப் விக்கெட்டுகள் சென்னை கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட வீரர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதை உருவாக்கினார். இன்றைக்கு அதில் பலர் கிட்டத்தட்ட இலவசமாக கிரிக்கெட்டைப் பயின்று வருகிறார்கள் (மைதானப் பராமரிப்புக் கட்டணம் மட்டும் வாங்குகிறார்).  நடராஜன் அகாதெமியிலிருந்து பெரியசாமி, வி. கெளதம், ஜி. அரவிந்த் போன்றோர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடியுள்ளார்கள். மூன்று பேர் தமிழ்நாடு அணிக்காகவும். ஜெட் லீ என்கிற வீரர் தமிழ்நாடு யு-16 அணியிலும் இடம்பெற்றுள்ளார். 15 வீரர்கள் டிஎன்சிஏ லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அடுத்ததாக சின்னப்பம்பட்டியில் 4.5 ஏக்கர் அளவில் ஒரு மைதானம் உருவாக்கி வருகிறார் நடராஜன். ஆஸ்திரேலியாவில் அறிமுகமான ஒரே வருடத்தில் சொந்த ஊரில் சொந்தமாக மைதானம் உருவாக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப். பவுண்டேசன் போல நடராஜன் அகாதெமியை உருவாக்க வேண்டும் என்பது நடராஜனின் பெரிய கனவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com