கெளன் பிரவீன் தாம்பே பட விமர்சனம்: ஓய்வு பெறும் வயதில் ஐபிஎல்-லில் விளையாடிய வீரரின் கதை

பிரவீன் தாம்பே பற்றியே நான் பேச விரும்புகிறேன் என்று ஒரு மேடையில் ராகுல் டிராவிட்...
கெளன் பிரவீன் தாம்பே பட விமர்சனம்: ஓய்வு பெறும் வயதில் ஐபிஎல்-லில் விளையாடிய வீரரின் கதை

சச்சின் டெண்டுல்கர் 40 வயதில் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருவர் 41 வயதில் ஐபிஎல்-லில் அறிமுகமானால்?

கெளன் பிரவீன் தாம்பே (Kaun Pravin Tambe), பழம்பெரும் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம். ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.

என்னிடம் சச்சின், கங்குலி பற்றி ஆர்வத்துடன் கேட்பார்கள். ஆனால் பிரவீன் தாம்பே பற்றியே நான் பேச விரும்புகிறேன் என்று ஒரு மேடையில் ராகுல் டிராவிட் சொல்ல ஆரம்பித்ததுதான் இப்படம் உருவாக பெரிய ஊக்கமாக இருந்திருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் நான் படம் பார்க்கத் தயாரானது அதனால்தான்.

41 வயதில் ஐபிஎல்-லில் அறிமுகமாகி, அதனாலேயே நீண்ட நாள் கனவான ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் பிறகு விளையாடினார் தாம்பே. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததால் கிடைத்த வாய்ப்பு அது. 20களிலும் 30களிலும் கிடைக்காத வாய்ப்புகள் 40களில் தேடி வந்தபோது இன்னமும் ஆர்வத்துடன் விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகளின் டி20 லீக் போட்டியான சிபிஎல்-லில் விளையாடிய முதல் இந்தியரும் தாம்பேதான். 48 வயதில்! பல ஐபிஎல் ஆட்டங்களில் நன்றாகவும் பந்துவீசியிருக்கிறார். இவர் பந்தை அடிக்க பல பேட்டர்களுக்குச் சிரமம் இருந்தது. இந்திய அணிக்கே இவரை எடுக்கலாம் போலயே என ஏதோவொரு முறை நான் ஆசைப்பட்டிருக்கிறேன்.

படத்தில் காண்பிக்கப்பட்டதெல்லாம் இந்த இடத்துக்கு வரும் முன்பு அவர் பட்ட சிரமங்கள் தாம். அதைச் சுவாரசியமாகச் சொல்லவில்லை என்பதுதான் பிரச்னை. இன்னொன்று இதுபோன்ற படங்களைச் சுவாரசியமாக எடுப்பதும் எளிதல்ல. இதைத் தாண்டி நான் முழுப் படமும் பார்த்ததற்குக் காரணம் ஷ்ரேயஸ் தல்பதே (Shreyas Talpade)-வின் உயிர்ப்பான நடிப்புதான். என்ன ஒரு நடிகர். பிரவீன் தாம்பேவை அச்சு அசலாகக் கண் முன்னே கொண்டு வந்துவிட்டார்.

தாம்பே வாழ்க்கையில் ஒரு பத்திரிகையாளரை எதிரியாக, அவருக்குத் தடையை ஏற்படுத்துபவராகக் காண்பித்திருக்கிறார்கள். அவர் பார்வையில் தான் கதையும் விரிகிறது. இது படத்தின் திரைக்கதைக்குப் பெரிய அளவில் உதவவில்லை. மேலும் தாம்பே எத்தனை நிறுவனங்களில் கிரிக்கெட்டுக்காக வேலை பார்த்தாரோ அவை தான் விரிவாகவும் காண்பிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வாய்ப்பு கிடைத்ததைப் படத்தின் கடைசிக்கட்டமாக நிர்ணயம் செய்துவிட்டார் இயக்குநர் ஜெய்பிரத் தேசாய். அதிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்துச் சாதித்தது, ரஞ்சியில் அறிமுகமானது போன்ற சம்பவங்களுக்கும் திரைக்கதையில் கூடுதல் இடம் இருந்திருக்கலாம். பகலில் சுழற்பந்துவீச்சைக் கற்றுக்கொள்வதற்காக ஒரு பாரில் இரவு வேளையில் தாம்பே வேலை செய்வதாக வரும் காட்சிகள், அவர் மீதான மதிப்பை மேலும் அதிகமாக்குகின்றன. ரஞ்சி கோப்பைப் போட்டியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வீரர்கள் எந்தளவுக்குத் தியாகம் செய்வார்கள், போராடுவார்கள் என்பதை இப்படத்தில் விரிவாகவே காண முடிகிறது.

வேகப்பந்து வீச்சாளராக இருந்த தாம்பேவைச் சுழற்பந்துவீச்சாளராக மாற்றும் பயிற்சியாளர் வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி. இருவருக்குமிடையேயான உரையாடல்கள் நன்றாக அமைந்துள்ளன. ஐபிஎல்-லில் தாம்பே ஆடும்போது மைதானத்தில் தாம்பேவின் சகோதரரும் தொலைக்காட்சி முன்பு குடும்பதினரும் ஆசிஷும் அழும் காட்சிகள் நம்மையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. தாம்பேவின் வெற்றியை பார் ஊழியர்களும் பார்த்து மகிழ்வதாகக் காண்பித்திருப்பது நன்று. 

தாம்பேவுக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தவுடன் படம் முடிய ஆரம்பித்துவிட்டது. ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் உள்ள சுவாரசியமான தருணங்களைப் படமாக்க வேண்டுமென்றால் நிறைய செலவு வைக்கும் என்கிற சிக்கலையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஓரிரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் பொம்மைப் பார்வையாளர்களைத்தான் காண்பித்தார்கள். 83 படம் போல படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்திருந்தால் தாம்பேவின் கதையை வேறுவிதமாகவே எடுத்திருக்கலாம். 

படத்தில் எதை முன்னிலைப்படுத்த வேண்டும், எதை விரிவாகக் காண்பிக்க வேண்டும் என்கிற முடிவுகள் தான் படத்தின் சுவாரசியத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. ஆனால் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் இப்படத்தைத் தவற விடக் கூடாது. தாம்பேவின் வாழ்க்கை வெகுஜனப் படத்துக்குரிய சுவாரசியத்துடன் இல்லாமல் போனாலும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஓய்வு பெறும் வயதில் 40களுக்குப் பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய தாம்பே,  நல்ல வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடி, அதில் வெற்றியும் கண்டார். அந்தக் கதையை இப்படம் வழியாகவாவது அறிந்துகொள்ள முயலவேண்டும். 

தாம்பேவுக்குக் ஒளி பாய்ச்சிய ஐபிஎல், வெளிநாட்டு லீக்கில் அனுமதி இல்லாமல் விளையாடியதற்காக அவருக்குத் தடையும் விதித்து ஒரேடியாக ஒதுக்கி வைத்தது. கடந்த வருடம் கூட 49 வயதில் அபுதாபி லீக்கில் விளையாடியிருக்கிறார் தாம்பே. இளமைக் காலம் முழுக்க நிராகரிக்கப்பட்டவனின் வாழ்க்கையை மாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்தால் போதும். அதைப் பற்றிக்கொண்டு மூச்சு நிற்கும் வரை ஓடிக்கொண்டிருப்பான். தாம்பே அந்த ரகம். அதனால் தான் சச்சின், கங்குலியை விடவும் தாம்பே பற்றி பேசுவதற்கே அந்த மேடையில் ராகுல் டிராவிட் பிரியப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com