ஜீரணிக்க முடியவில்லை: பேட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா

டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
ஜீரணிக்க முடியவில்லை: பேட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பேட் கம்மின்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று தான் அவருடைய முதல் ஆட்டம். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார் பேட் கம்மின்ஸ். 2018-ல் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது கம்மின்ஸும் அதே பந்துகளில் அரைசதம் அடித்து மும்பை அணியை மிரள வைத்துள்ளார். 

மும்பை அணி இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 

தோல்விக்குப் பிறகு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

பேட் கம்மின்ஸ் களமிறங்கி இப்படி ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நான் எதிர்பார்க்கவேயில்லை. இதுபோல விளையாடியதற்குப் பாராட்டுகள். பேட்டிங்கில் நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் நன்கு விளையாடி 161 ரன்கள் எடுத்தது நல்ல முயற்சி. 15-வது ஓவர் வரைக்கும் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது. ஆனால் கம்மின்ஸின் ஆட்டத்தினால் நாங்கள் தோற்றுவிட்டோம். கேகேஆர் அணியை வீழ்த்திவிடலாம் என நினைத்தோம். கடைசி சில ஓவர்களில் இந்த ஆட்டம் மாறிய விதத்தை ஜீரணிப்பது கடினம். நாங்கள் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com