ஒன்றாக ஜெயிப்போம் அல்லது ஒன்றாகத் தோற்போம்: ரோஹித் சர்மா பேச்சு

தோல்விக்கு தனிப்பட்ட நபர்கள் மீது பழி போட முடியாது. நாம் எல்லோருமே இதற்குப் பொறுப்பு.
ஒன்றாக ஜெயிப்போம் அல்லது ஒன்றாகத் தோற்போம்: ரோஹித் சர்மா பேச்சு

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பேட் கம்மின்ஸ். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் (14) அரைசதம் அடித்த சாதனையைச் சமன் செய்துள்ளார் பேட் கம்மின்ஸ்.

சமீபத்தில் 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. இதையடுத்து அணி வீரர்களிடம் ரோஹித் சர்மா பேசிய விடியோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹித் சர்மா பேசியதாவது:

தோல்விக்கு தனிப்பட்ட நபர்கள் மீது பழி போட முடியாது. நாம் எல்லோருமே இதற்குப் பொறுப்பு. ஒன்றாக ஜெயிப்போம் அல்லது ஒன்றாகத் தோற்போம். வெற்றிக்கான கூடுதல் ஆர்வம் மட்டுமே நம்மிடம் தேவை. இது போன்ற போட்டிகளில் இந்தத் தன்மை மிகவும் முக்கியம். எதிரணிகள் வெவ்வேறானவை. புதிய திட்டங்களுடன் களமிறங்குவார்கள். அவர்களை விட ஒரு படி மேலே நாம் இருக்கவேண்டும். அதனால் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் நாம் எண்ணுவதைச் செயல்படுத்தியாக வேண்டும் என்கிற கூடுதல் உணர்வு நம்மிடம் அவசியம். இதுவரை நாம் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் சில நல்ல விஷயங்களைச் செய்துள்ளோம். ஆட்டத்தின் சிறிய தருணங்களை ஒவ்வொருவரும் உணரவேண்டும். இந்த ஓவரில் இதைச் செய்யவேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தும்போது அந்த ஓவரில் என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். அதை நமக்குச் சாதகமாக மாற்ற வேண்டும். நாம் பதற்றம் அடையக் கூடாது. அறையில் ஒவ்வொருவரின் திறமையைப் பற்றி நாம் பேசலாம். அந்த திறமையை, சாதிக்க வேண்டும் என்கிற உணர்வை மைதானத்தில் வெளிப்படுத்தாவிட்டால் வெற்றி கிடைக்காது. தலைகவிழ வேண்டிய அவசியம் இல்லை. இது போட்டியின் ஆரம்ப நிலை தான். இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் நம் குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளோம். தலைநிமிர்ந்து நடப்போம். நாம் அனைவரும் ஒன்றாகச் சாதிப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com