மும்பையைக் காப்பாற்றி கரை சேர்த்த சூர்யகுமார்: பெங்களூருவுக்கு 152 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
Updated on
1 min read


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் நல்ல தொடக்கத்தையே தந்தனர். கிஷன் பொறுமையாக விளையாட ரோஹித் துரிதமாக விளையாடினார். இதனால், மும்பை அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது.

சொதப்பல் பேட்டிங்:

பவர் பிளே முடிந்தவுடன் ஹர்ஷல் படேலை அறிமுகப்படுத்தினார் டு பிளெஸ்ஸி. இதற்குப் பலனாக ரோஹித் சர்மா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இளம் டெவால்ட் பிரேவிஸ் 8 ரன்களுக்கு வனிந்து ஹசரங்கா சுழலில் ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து, கிஷன் (26) ஆகாஷ் தீப் பந்திலும், திலக் வர்மா (0) அதே ஓவரில் கிளென் மேக்ஸ்வெல்லின் சிறப்பான த்ரோவிலும் அவுட் ஆக ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. அனுபவ கைரன் பொலார்டும் முதல் பந்திலேயே ஹசரங்கா சுழலில் ஆட்டமிழக்க, மும்பை இக்கட்டான நிலையை அடைந்தது.

11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. ரமன்தீப் சிங்கும் ஒத்துழைக்காமல் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 14 ஓவர்கள் முடிவில் 80 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

சூப்பர் சூர்யா:

இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் எவரையும் நம்பாது அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார். இதனால், ரன் ரேட் படிப்படியாக உயர்ந்தது. குறிப்பாக முகமது சிராஜ் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட மும்பைக்கு அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தன. அவரும் அரைசதத்தைக் கடந்தார்.

ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் முதல் 3 பந்துகள் சூர்யகுமார் யாதவுக்கு ஸ்டிரைக் கிடைக்கவில்லை. 4 மற்றும் 5-வது பந்துகளில் ஹர்ஷலின் சிறப்பான பந்துவீச்சால் சூர்யகுமாரால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால், கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இன்னிங்ஸை முடித்தார் சூர்யகுமார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்கள் விளாசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com