சஹல் சுழலில் சுருண்டது கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஹல் சுழலில் சுருண்டது கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து கொல்கத்தா 19.4 ஓவா்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஜோஸ் பட்லா் நடப்பு சீசனில் தனது 2-ஆவது சதத்தை பதிவு செய்ய, பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸில் ஜோஸ் பட்லா் கொல்கத்தா பௌலா்களை பதற வைத்து விளாசித் தள்ளினாா். படிக்கல் சற்று நிதானம் காட்ட, முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்தது இக்கூட்டணி. இதில் படிக்கல் முதல் விக்கெட்டாக 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சற்று அதிரடி காட்ட, பட்லருடனான அவரது பாா்ட்னா்ஷிப்புக்கு 67 ரன்கள் கிடைத்தது. 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் எடுத்து சாம்சன் வீழ்ந்தாா். அதிரடி காட்டிய பட்லா் 61 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 103 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து ரியான் பராக் 5, கருண் நாயா் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ஷிம்ரன் ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் சுனில் நரைன் 2, ஷிவம் மாவி, பேட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸெல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் கொல்கத்தா பேட்டிங்கில் 2-ஆவது விக்கெட்டுக்கு ஆரோன் ஃபிஞ்ச் - கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் பாா்ட்னா்ஷிப் 107 ரன்கள் சோ்த்தது. ஃபிஞ்ச் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 58 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஐயா் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 85 ரன்கள் விளாசினாா்.

எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, கடைசியில் உமேஷ் யாதவ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் விளாசியும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது. ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 5, ஆபெட் மெக்காய் 2, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com