வீணாக போன ரஸ்ஸலின் அதிரடி; குஜராத் அசத்தல் வெற்றி 

குஜராத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் ரஸ்ஸல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ரஸ்ஸல்
ரஸ்ஸல்

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டனர். தொடக்க வீரரான ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3ஆம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 

10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

செளதி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பாக ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பில்லிங்ஸ் 4 ரன்களிலும் நரைன் 5 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த போட்டி சுவாரஸ்யமாக நகர்ந்தது. 

இருப்பினும், குஜராத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் ரஸ்ஸல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

குஜராத் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷமி 20 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com