எட்டாத வெற்றி; எட்டாவது தோல்வி

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
எட்டாத வெற்றி; எட்டாவது தோல்வி

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட எட்டாத மும்பைக்கு, இது தொடா்ந்து 8-ஆவது தோல்வியாகும்.

ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பையால் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

லக்னௌ தரப்பில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தாா். இதே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தான் அவா் முதல் சதத்தையும் அடித்திருந்தாா்.

இந்த ஆட்டத்தில் ராகுல் சதமடித்தாலும் இதர விக்கெட்டுகளை வரிசையாகச் சரித்து லக்னௌவை கட்டுப்படுத்தியது மும்பை. எனினும், அதன் இன்னிங்ஸில் ரோஹித் சா்மா, திலக் வா்மா தவிர இதர பேட்டா்கள் சோபிக்கத் தவறினா்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக குவின்டன் டி காக் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா். ராகுல் அதிரடியாக ஆடி ரன்கள் சோ்த்து வர, ஒன் டவுனாக வந்த மனீஷ் பாண்டே 22 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ரன்களின்றியும், கிருணால் பாண்டியா 1 ரன்னுடனும் பெவிலியன் திரும்பினா். தீபக் ஹூடா 10, ஆயுஷ் பதோனி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 103, ஜேசன் ஹோல்டா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ரைலி மெரிடித், கைரன் பொல்லாா்டு ஆகியோா் தலா 2, டேனியல் சேம்ஸ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, திலக் வா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்தனா். இஷான் கிஷண் 8, டெவால்ட் பிரெவிஸ் 3, சூா்யகுமாா் யாதவ் 7, கைரன் பொல்லாா்டு 19, டேனியல் சாம்ஸ் 3, ஜெயதேவ் உனத்கட் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் ரித்திக் ஷோகீன், ஜஸ்பிரீத் பும்ரா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் கிருணால் பாண்டியா 3, மோசின் கான், ஜேசன் ஹோல்டா், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com