கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்: நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்த ரஷித் கான்

ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கானின் கடைசி நேர அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
சஹா
சஹா


ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கானின் கடைசி நேர அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா அதிரடி தொடக்கத்தைத் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். சஹா அதிரடியால் குஜராத் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 8-வது ஓவரில் உம்ரான் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த ஐபிஎல் முழுவதும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்திலும் வேகத்துக்குப் பஞ்சம் இல்லாமல் மிரட்டினார்.

இதற்குப் பலனாக முதலில் ஷுப்மன் கில் (22) போல்டானார். அடுத்து களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை முதல் பந்திலேயே மிரட்டினார். அடுத்த ஓவரில் அவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சஹா 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

உம்ரான் மாலிக்குக்கு ஓய்வளிக்கப்பட்டதையடுத்து சஹா சற்று அதிரடி காட்டி ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தார். பின்னர் 14-வது ஓவரில் மாலிக் மீண்டும் கொண்டுவரப்பட்டார். சிறப்பாக விளையாடி வந்த சஹாவை 153 கி.மீ. வேகத்தில் யார்க்கர் வீசி போல்டாக்கினார் மாலிக். சஹா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

எடுத்த விக்கெட் போதாதென்று தனது கடைசி ஓவரில் முதலில் டேவிட் மில்லரை (17) போல்டாக்கி ஹைதராபாத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மேலும் கடைசி பந்தில் அபினவ் மனோகரையும் போல்டாக்கி அசத்தினார் உம்ரான் மாலிக்.

4 ஓவரில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மாலிக்.

இந்த நிலையில், குஜராத் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கான் இருந்தனர்.

 நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஓரளவு சிறப்பாக வீசியதால் கடைசி 2 ஓவரில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரில் நடராஜன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கொடுத்ததால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. 

மார்கோ யான்சென் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை தெவாட்டியா சிக்ஸரை பறக்கவிட்டார். 3-வது பந்தை ரஷித் கான் சிக்ஸருக்கு அனுப்பினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காததால், கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் கான் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு குஜராத்துக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்றுத் தந்தார்.

கடைசி ஓவரில் 25 ரன்கள் விளாசிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாட்டியா 21 பந்துகளில் 40 ரன்களும், ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் தரப்பில் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மட்டுமே வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com