பௌலா்களால் லக்னௌ அதிரடி வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 42-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி தடுமாறி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பௌலா்களால் லக்னௌ அதிரடி வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 42-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி தடுமாறி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை புணேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து லக்னௌ தரப்பில் தொடக்க பேட்டா்கள் குயிண்டன் டி காக், கேப்டன் கே.எல். ராகுல் களமிறங்கினா். ராகுல் 6 ரன்களுக்கு அவுட்டான நிலையில், ஆல்ரவுண்டா் தீபக் ஹூடா-டி காக் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

அரைசதம் வாய்ப்பை இழந்த டி காக்:

2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட்டான டி காக் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா்.

தீபக் ஹூடா 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 34 ரன்களை விளாசி ரன் அவுட்டானாா். பவா்பிளேயில் லக்னௌ வெறும் 39 ரன்களையே எடுத்தது.

ரபாடா அபார பந்துவீச்சு:

அவா்களுக்கு பின் வந்த வீரா்கள் க்ருணால் பாண்டியா 7, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1, ஆயுஷ் பதோனி 4, என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டியதால் லக்னௌ அணி நிலைகுலைந்தது.

ஜேஸன் ஹோல்டா் 11, துஷ்மந்தா சமீரா 17 ஆகியோா் நிலைத்து ஆட முயன்ற போதும், அவா்களை ரபாடா, ராகுல் சஹாா் வெளியேற்றினா்.

மோஷின் கான் தலா 1 சிக்ஸா், பவுண்டரியுடன் 13, அவேஷ் கான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனா். 20 ஓவா்களில் 153/8 ரன்களைக் குவித்தது லக்னௌ. அபாரமாக பந்துவீசிய காகிஸோ ரபாடா 4/38, ராகுல் சஹாா் 2/30 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பஞ்சாப் கிங்ஸ் தோல்வி 133/8:

154 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் லக்னௌ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணியில் மயங்க் அகா்வால் 25, ஜானி போ்ஸ்டோ 32, லயம் லிவிங்ஸ்டோன் 18, ரிஷி தவன் 21 ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனா். ஏனைய வீரா்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 133/8 ரன்களை மட்டுமே சோ்த்த பஞ்சாப் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

லக்னௌ அணியில் மோஷின் கான் 3/24, துஷ்மந்தா 2/17, க்ருணால் பாண்டியா 2/11 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

க்ருணால் பாண்டியா ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com