குஜராத் வெற்றி நடைக்கு பஞ்சாப் தடை

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
குஜராத் வெற்றி நடைக்கு பஞ்சாப் தடை

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

தொடா் வெற்றிகளை சந்தித்து வந்த குஜராத்தை கட்டுப்படுத்தியது பஞ்சாப்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து பஞ்சாப் 16 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் முதல் விக்கெட்டாக ஷுப்மன் கில் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். உடன் வந்த ரித்திமான் சாஹா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக வந்த சாய் சுதா்சன் நிலைத்து ஆடி அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். எனினும் மறுபுறம், கேப்டன் ஹாா்திக் பாண்டியா 1, டேவிட் மில்லா் 11, ராகுல் தெவாதியா 11, ரஷித் கான் 0, பிரதீப் சங்வான் 2, லாக்கி ஃபொ்குசன் 1 பவுண்டரியுடன் 5 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன. ஓவா்கள் முடிவில் சுதா்சன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65, அல்ஸாரி ஜோசஃப் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் ரபாடா 4, அா்ஷ்தீப் சிங், ரிஷி தவன், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய பஞ்சாபில் தொடக்க வீரா் ஜானி போ்ஸ்டோ 1 ரன்னுக்கு வெளியேற, உடன் வந்த ஷிகா் தவன் நிலைத்து ஆடினாா். ஒன் டவுனாக வந்த பானுகா ராஜபட்ச 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த லியம் லிவிங்ஸ்டன், தவனுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா்.

இறுதியில் தவன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62, லிவிங்ஸ்டன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது ஷமி, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அகமதாபாதில் இறுதி ஆட்டம் 
நடப்பு சீசனுக்கான பிளே-ஆஃப், இறுதி ஆட்டத்துக்குரிய அட்டவணையை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. குவாலிஃபயர் - 1 ஆட்டம் மே 24-ஆம் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 25-ஆம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன. குவாலிஃபயர் - 2 ஆட்டம் 27-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் 29-ஆம் தேதியும் அகமதாபாதில் நடைபெறவுள்ளன. மறுபுறம், மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் 23, 24, 26, 28 ஆகிய தேதிகளில் புணேவில் விளையாடப்படவுள்ளன.

ஐபிஎல் போட்டியில் வைடு 
மற்றும் இடுப்புக்கு மேலாக வரும் "நோ பால்' ஆகியவை தொடர்பாக பெளலர்கள் டிஆர்எஸ் கோர அனுமதிக்க வேண்டும் என நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com